Election Exclusive: தமிழ்நாடே தள்ளாட போகுது..நாளை உருவாகும் புதிய கட்சி! சசிகலாவின் ‘அம்மா அதிமுக’..எடப்பாடிக்கு சிக்கல்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் புதிய வரவாக அரசியல் கட்சி ஒன்று நாளை உருவாக இருக்கிறது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நிழலாக கருதப்பட்ட சசிகலா, நாளை 'அம்மா அதிமுக' என்ற கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுகிறார். கட்சி தொடங்கியதும் தேர்தல் ஆணைய பதிவு பணிகள் தொடங்கும் எனவும், அது நடக்காவிட்டாலும் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது தான் சசிகலாவின் எண்ணம் என்கின்றனர். மேலும் எடப்பாடிக்கும் டிடிவி தினகரன் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் தனது ஆதரவாளர்களை தளத்தில் இறக்கப் போகிறார் சசிகலா என்கின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களில் இருக்கிறது. மார்ச் இரண்டாவது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடக்கலாம் என சொல்லப்படுகிறது. இதை ஒட்டி முன்னதாகவே அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.
திமுக சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் மேலும் சில அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு வந்திருப்பதால் தொகுதி பங்கீட்டை மிக தீவிரமாக கையாண்டு வருகிறது திமுக தலைமை.

2026 சட்டசபை தேர்தல்
மக்கள் நீதி மய்யம், தேமுதிக கூட்டணிக்கு வந்திருக்கும் நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் வரலாம் என சொல்லப்படுகிறது. இதனால் திமுகவுக்கு கூடுதல் நெருக்கடி உருவாகியுள்ளது. மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் திணறி வருகிறது. அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளன. ஜான்பாண்டியன் தமமுக, பாரிவேந்தரின் ஐஜேகே, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட சிறிய கட்சிகளும் இருக்கிறது.
தமிழக அரசியல்
கூட்டணிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, திமுக பக்கம் தாவி விட்டது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி வகுத்த தேர்தல் வியூகங்கள் பாதியில் நிற்கிறது. இந்த நிலையில் பல ஆண்டுகாலம் மோதலில் ஈடுபட்டு வந்த டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியுடன் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். இதில் மிகவும் பாதிக்கப்பட்டது சசிகலாதான். தன்னால் முதல்வராகப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் தன்னால் மீண்டும் அரசியலில் என்ட்ரி கொடுத்த டிடிவி தினகரன் சேர்ந்து விட்ட நிலையில் ராஜமாதாவான தன்னை ஓரம் கட்டி விட்டார்களே என்ற கோபம் சசிகலாவுக்கு இருக்கிறது.
சசிகலா புதிய கட்சி
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக முழுவதும் இல்லாவிட்டாலும் டெல்டா தென் மாவட்டங்களில் தனக்கு இருக்கும் முக்குலத்தோர் சமுதாய செல்வாக்கை பயன்படுத்தி எடப்பாடி பழனிச்சாமிக்கும் டிடிவி தினகரனுக்கும் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு வருகிறார் சசிகலா. இதற்காக அவர் தேர்ந்தெடுத்து இருப்பது ஜெயலலிதாவின் பிறந்த நாளை. ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நாளை நடக்க இருக்கும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்துகிறார் சசிகலா.
அம்மா அதிமுக தொடக்கம்
அந்த விழாவில் அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொள்கின்றனர். இது ஒரு புறம் இருக்க அந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அம்மா அதிமுக என்ற புதிய கட்சியின் அறிவிப்பை சசிகலா வெளியிடுவார் என்கின்றனர். கட்சியின் பெயரை அறிவித்ததும் தேர்தல் ஆணைய பதிவுக்கு விண்ணப்பிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் தாமதமாகத்தான் கிடைக்கும் என்பது சசிகலாவுக்கு தெரியும். அதனால் பிரமாண்டமாக கட்சி தொடக்க விழாவை மதுரையில் நடத்தி விட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறார் என்கின்றனர்.
தமிழக வெற்றி கழகம் கூட்டணி
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறார் சசிகலா. அதற்காக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகள், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளை சசிகலாவின் ஆதரவாளர்கள் களமிறங்குவார்கள் என சொல்லப்படுகிறது.
எடப்பாடிக்கு நெருக்கடி
விஜய் கட்சி ஜெயிக்கிறதோ இல்லையோ அதிமுகவையும் அதிமுகவையும் ஜெயிக்க விடக்கூடாது என்பதுதான் சசிகலாவின் திட்டம். அதற்கான அறிவிப்பை நாளை அவர் வெளியிடுவார் என்கின்றனர். சசிகலாவை சமாதானம் செய்ய பாஜக தரப்பு முயன்று வரும் நிலையில் அதற்கு அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்றும், புதிய கட்சி ஆரம்பிக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications