Election Exclusive: தி ரிட்டர்ன் ஆஃப் சின்னம்மா.. கமுதியில் களைகட்டும் ப்ளான்! துரோகிகளை வேரறுப்போம்.. பறந்த மெசேஜ்!
சென்னை: அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வரும் 24ஆம் தேதி கமுதியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் துரோகிகளை வேர் அறுத்திட ஒன்றுபடுவோம் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் சசிகலா. அந்த கூட்டத்தில் சசிகலாவின் புதிய கட்சியான 'அம்மா அதிமுக' குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர்.
அதிமுக அரசியல் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த சசிகலா, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நெருங்கிய, நம்பிக்கைகுரிய தோழியாக இருந்தவர். கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் பின்னணியில் இருந்தே அவர் செல்வாக்கு செலுத்தியது அனைவருக்கு தெரிந்தே.
இதனால் கட்சி தொண்டர்கள் ஜெயலலிதாவை "அம்மா" என்றும், சசிகலாவை "சின்னம்மா" என்றும் அழைத்தனர். 2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மறைந்ததைத் தொடர்ந்து, சசிகலா நேரடியாக அரசியல் மேடைக்கு வந்தார்.

அதிமுக பிளவு
2017 பிப்ரவரியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அவர், கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு செல்லும் முன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவித்தது அரசியல் திருப்பமாக அமைந்தது.
சசிகலா
சிறைவாசம் முடிந்து வெளியே வந்தபின், அதிமுக அரசியல் அமைப்பு மாறிவிட்ட சூழலில் சசிகலா மீண்டும் கட்சிக்குள்ளேயே வர முடியவில்லை. அதன்பிறகு அவர் அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகி, ஆதரவாளர்களுடன் மட்டுமே தொடர்பில் இருந்தார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை பலமுறை வலியுறுத்தியிருந்தாலும், அதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் ஓபிஎஸ் நிரந்தரமாக வெளியேற்றப்பட்ட நிலையில் தனது உறவினரான டிடிவி தினகரன் எடப்பாடி உடன் சேர்ந்தது சசிகலாவுக்கு பிடிக்கவில்லை.
விஜய் தவெக
இதை அடுத்து புதிய கட்சி ஆரம்பித்து விஜய் உடன் கூட்டணி அமைத்து அதிமுகவின் அடிப்படை வாக்கு வங்கியையும் முக்குலத்தோர் வாக்கு வங்கியையும் உடைக்க சசிகலா திட்டமிட்டுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள கோட்டைமேடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திடலில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலா கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அம்மா அதிமுக
மேலும் அம்மா அதிமுக என்ற கட்சியின் அறிவிப்பும் இருக்கும் என்கின்றனர். இந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் சசிகலா ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். அவரது எண்ணங்களை ஈடேற்றமும் எதிரிகளையும் துரோகிகளையும் வேரறுத்திடவும் புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என அழைப்பு விடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications