6600 கோடியைத் திரும்ப அளிக்குமா பாஜக? ஆப்பு வைத்த உச்சநீதிமன்றம்!
சென்னை: 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறும் திட்டத்தை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு இருந்தது. அந்த வழக்கை முழுமையாக விசாரித்து வந்த 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இன்று இந்த அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது.

இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று எதிர்க்கட்சிகள் பல கருத்து கூறியுள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? அதன் மூலம் நிதி பெறுவதில் என்ன சிக்கல்கள் உள்ளன என்பதை முதலில் தெளிவாகப் பார்த்துவிடுவோம்.
2017 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் ஒரு திட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்தது. அதன்படி 2018 முதல் அரசியல் கட்சிகளுக்குத் தனியார் நிறுவனங்கள் அல்லது தனிப்பட்ட நபர்கள் நிதி அளித்து வருகின்றனர்.
அதன்படி 2018 முதல் 2023 மார்ச் வரை கட்சிகளுக்குத் தரப்பட்ட நன்கொடை குறித்த விவரங்கள் ஊடகங்களில் வெளியாகின. அதன்படி பார்த்தால், இந்தக் குறிப்பிட்ட கால வரம்புக்குள் 6600 கோடி ரூபாய்க்கான தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே பாஜக பெற்றுள்ளது தெரியவந்தது.

அதாவது விற்கப்பட்ட பத்திரங்களில் 60% அளவுக்கு ஆளும் கட்சியான பாஜகவுக்கு மட்டுமே இந்த நிதியானது கிடைத்துள்ளது. பாஜக கடந்த 4 ஆண்டுகளில் 6600 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.
அதை எதிர்த்துத்தான், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.
ஏதேனும் எதிர்க்கட்சிகளுக்கு இந்தப் பத்திரங்கள் மூலமாகத் தனியார் நிறுவனங்கள் நன்கொடை அளித்தால், அதன் வங்கி பரிவர்த்தனை மூலம் ஆளும் கட்சியான பாஜக தகவலைத் திரட்டி, குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை மூலம் நெருக்கடி அளிக்கிறது.
அதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நிதி வழங்குவதை மறைமுகமாக ஆளும் கட்சி முடக்கி வைத்துள்ளது.

உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முழுமையாக விசாரித்து இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது. இந்தத் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் திட்டமே அரசியல் சானத்திற்கு எதிரானது என்று 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் எஸ்பிஐ வங்கிக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இன்றைய தேதிவரை எத்தனை தேர்தல் பத்திரங்கள் எஸ்பிஐ வங்கி மூலமாக விற்கப்பட்டது. அதை எந்தெந்த நிறுவனங்கள் வாங்கினர்? அது தொடர்பான தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதைப் போலவே இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற கட்சிகள் எவ்வளவு நிதியைப் பெற்றுள்ளனர் என்ற விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதைக் கொண்டு நன்கொடை அளித்தோர் விவரங்களைத் தேர்தல் ஆணையம் மார்ச் 31க்குள் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட வேண்டும்.
தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், ஐடி சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்களை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 1000 கோடி ரூபாய் கூட இதுவரை கிடைக்கவில்லை.
இதில் சிக்கல் என்னவென்றால், இதுவரை பாஜக பெற்றுள்ள நன்கொடையைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி மார்ச் மாதத்திற்கு மேல் தேர்தல் ஆணையம் முழுத் தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் போது மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.
அப்படி வரும்பட்சத்தில் இதுவரை பாஜகவுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்களுக்கு ஆளும் கட்சி ஏதேனும் சாதகமாக நடந்து கொண்டுள்ளதா? குறிப்பாக ஏதேனும் ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? என்ற விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும்.

அதன் மூலம் ஏதேனும் முறைகேடுகள் வரும் காலங்களில் வெளிச்சத்திற்கு வரலாம் என்று அரசியல் கட்சிகள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன.
இந்தத் தீர்ப்பில் மேலும் அதிரடியான விசயம் என்னவென்றால், இதுவரை பெற்ற நிதியைத் திரும்ப அளிக்க வேண்டும் என்று உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அது குறித்த விபரங்கள் இன்னும் தெளிவாகக் கிடைக்கவில்லை.
இந்தத் தீர்ப்புக்குப் பிறகு பெற்ற நன்கொடையைத் திரும்ப அளிக்க வேண்டுமா ? அல்லது இதுவரை வாங்கிய அத்தனை கோடி ரூபாய்களையும் திரும்ப அளிக்க வேண்டுமா? என்பது முழுத் தீர்ப்பின் விபரங்கள் வெளியான பிறகு தெரிய வரும்.












Click it and Unblock the Notifications