மின்சார வாரியத்தில் 15000 ரூபாய் லஞ்சம் கேட்ட TNEB அரசு அதிகாரி.. இருளில் மூழ்கிய விவசாயி குமுறல்
சென்னை: சென்னை ஆவடி பகுதியில், புதிய மின் இணைப்பு வழங்க 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக TNEB EB Inspector கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. வாழ்நாள் முழுக்க சேமித்த பல ஆண்டுகள் வெயிலிலும் மழையிலும் மண்ணோடு மல்லுக்கட்டி சேர்த்த பணத்தில், ஒரு சிறிய வீட்டைக் கட்டி முடித்துவிட வேண்டும் என்பதுதான் அந்த விவசாயியின் லட்சியம். ஆனால், அந்த வீட்டிற்கு ஒளியூட்ட வேண்டிய மின்சார வாரியமே அவரது வாழ்க்கையில் இருளை பாய்ச்சிவிடுகிறது.. அதனால்தான் கரண்ட் கனெக்ஷனுக்கு கறாராக லஞ்சம் கேட்ட ரேகா என்ற பெண் அதிகாரி 2 நாட்களுக்கு முன்பு கைதானார்.. இதோ அடுத்தடுத்து சிக்கியவர்களை பாருங்கள்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு முதுகெலும்பாக இருக்க வேண்டிய அரசு இயந்திரம், சில அதிகாரிகளின் பேராசையால் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடுகிறது.

பரந்தூர் விமான நிலையம்
காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையத் திட்டம் முதல் ஆவடி மின்வாரிய அலுவலகம் வரை, எளிய மனிதர்களின் உழைப்பையும் உரிமையையும் லஞ்சமாக பெற நினைக்கும் அதிகாரிகளின் முகம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது... ஆனால் இதையெல்லாம் வெறும் லஞ்சமாக பார்க்க முடியாது.. நிலத்தையும் வியர்வையையும் மூலதனமாகக் கொண்ட மனிதர்களின் நம்பிக்கையை சிதைக்கும் துரோகம் என்றுதான் சொல்ல வேண்டும்..
காஞ்சிபுரத்தில் அரங்கேறிய சம்பவம் லஞ்சத்தின் உச்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காகத் தனது 64 சென்ட் நிலத்தைத் தர முன்வந்த ரஞ்சித் குமார் என்ற குடிமகனிடம், அவரது விருப்ப மனுவைச் சரிபார்க்கவே ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் நில அளவை ஆய்வாளர் சுந்தரவடிவேலு.
நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தன் நிலத்தைத் தர முன்வந்த ஒருவனிடமே, வேலையை செய்ய பணம் கேட்பது எத்தகைய அறமற்ற செயல்? நிலத்தை அளக்க வேண்டிய அதிகாரி, ஒருவனின் நேர்மையை அளக்க முயன்றதுதான் இங்கு வேதனை.
ஆவடி மின் இணைப்பு கேட்ட விவசாயி
இதேபோல் ஆவடியில் புதிய வீடு கட்டி, அதற்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த ஒரு விவசாயியிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட மின்வாரிய ஆய்வாளரின் செயலும் கண்டிக்கத்தக்கது.
ஒருவருக்கு தனது சொந்த நிலத்தில் வீடு கட்டி அதில் மின்சாரம் பெறுவது என்பது அடிப்படை உரிமை. அந்த உரிமையை வழங்குவதற்கு விலை பேசுவது, அந்த எளிய மனிதனின் வாழ்நாள் சேமிப்பைக் கொள்ளையடிப்பதற்கு சமம். இந்த இரண்டு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மனிதர்கள்தான்.. ஆனால் அவர்கள் காட்டிய துணிச்சல் அசாதாரணமானது.
லஞ்சம் கொடுக்க வசதி இல்லாமலோ அல்லது அநீதிக்கு அடிபணிய விரும்பாமலோ, இந்த இரண்டு சாமானியர்களும் லஞ்ச ஒழிப்புத் துறையை நாடியதுதான் இந்த செய்திகளின் செம ட்விஸ்ட்..
மின் அதிகாரி லஞ்சம்
காஞ்சிபுரத்தில் 50 ஆயிரம் ரூபாய் முதற்கட்டமாக பெற்றபோது சுந்தரவடிவேலுவும், ஆவடியில் பணம் பெற்றபோது மின்வாரிய அதிகாரியும் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டனர். ரசாயனம் தடவிய நோட்டுகளுடன் போலீசார் பாய்ந்த அந்தத் தருணம், ஊழல் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகும்.
அரசு அலுவலகங்களுக்கு செல்ல அஞ்சும் பலருக்கு, ரஞ்சித் குமார் போன்றவர்களின் துணிச்சல் ஒரு ஊக்கமருந்தாக அமையும். அதிகார வர்க்கத்தின் திமிரை விட, ஒரு சாமானியனின் நேர்மை வலிமையானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது... இனியாவது இந்த லஞ்சம் புகார்கள் குறையுமா? என்று பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications