யார் யாருக்கு மின் கட்டணத்தில் மாற்றமில்லை? யாருக்கு எவ்வளவு கரண்ட் பில் உயரும்? தமிழக அரசு விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், யார் யாருக்கு மின் கட்டணத்தில் மாற்றமில்லை? யார், யாருக்கு எவ்வளவு கட்டணம் உயரும்? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு தெளிவுபடுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று மாலை உத்தரவிட்டிருந்தது.. அதன்படி, இப்போதிருப்பதிலிருந்து 4.38 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதில், குடியிருப்புகளுக்கு 1 முதல் 400 யூனிட் வரை, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆகவும், 401-500 யூனிட் வரை ரூ.6.15-ல் இருந்து ரூ.6.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மின்கட்டணம்: 501-600 யூனிட் வரை ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆகவும், 601-800 யூனிட் வரை ரூ.9.20-ல் இருந்து ரூ.9.65 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 801-1000 யூனிட் வரை ரூ.10.20-ல் இருந்து ரூ.10.70 ஆகவும், 1000 யூனிட்டுக்கு மேல் ரூ.11.25-ல் இருந்து ரூ.11.80 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு வசதிகள், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தெருவிளக்கு, குடிநீர் விநியோகத்துக்கான மின்கட்டணம் ஒரு யூனிட் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்ந்துள்ளது. விவசாய பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ல் இருந்து ரூ.4.80 ஆக உயர்ந்துள்ளது.
நிலைக்கட்டணம்: நிலைக் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.102-ல்இருந்து ரூ.107 ஆக உயர்ந்துள்ளது. கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு யார், யாருக்கு எவ்வளவு உயரும் என்பது குறித்து, தமிழ்நாடு அரசு தற்போது விளக்கமளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 2 கோடியே 47 லட்சம் வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோர் உள்ள நிலையில், அதில் 1 கோடி நுகர்வோருக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்று தமிழக அரசு அறிக்கை மூலம் இதனை தெரிவித்திருக்கிறது.
அந்த அறிக்கையில் மேலும் உள்ள அம்சங்கள் இவைகள்தான்:
- வீட்டு மின் நுகர்வோர்களுக்கு நிலை கட்டணத்தில் இருந்து விலக்கு தொடர்கிறது. குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிபாட்டு தலங்கள், தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
- அதேபோல், 2.19 லட்சம் சிறு, குறு தொழில் மின் நுகர்வோருக்கு யூனிட்டிற்கு 20 காசுகள் மட்டுமே உயரும்.
விசைத்தறி நுகர்வோர்களுக்கான 1000 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்.
- ஆயிரத்து ஒன்று முதல் 1500 யூனிட் வரை யூனிட்டிற்கு 20 பைசாவும், 1501 யூனிட்டிற்கு மேல் யூனிட்டிற்கு 25 காசுகள் உயரும்.
- 22.36 லட்சம் சிறு வணிக மின் நுகர்வோருக்கு 2 மாதங்களுக்கு 30 ரூபாய் மட்டுமே உயரும்.
- தாழ்வழுத்த, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட்டிற்கு 35 பைசா உயரும்.
- உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டிற்கு 40 பைசா மட்டுமே உயரும்.
- நிலையான கட்டணங்கள் கிலோவாட் ஒன்றுக்கு, மாதத்திற்கு 3 முதல் 27 ரூபாய் மட்டுமே உயரும்
- 2 மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு, மின் கட்டணம் 10 ரூபாய் வரை உயரும்.
- 2 மாதங்களுக்கு 300 யூனிட் வரை பயன்படுத்தும் 35 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு, 30 ரூபாய் வரை மட்டுமே உயரும்.
- 2 மாதங்களுக்கு 400 யூனிட் வரை பயன்படுத்தும் 25 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு, 50 ரூபாய் வரை உயரும்
- 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின் நுகர்வு செய்யும் 13 லட்சம் வீட்டு நுகர்வோருக்கு, 80 ரூபாய் வரை மட்டுமே உயரும் என்று அறிக்கையில் கூறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications