பல்லாவரம், குரோம்பேட்டையில் ஆக்கிரமிப்பு.. செங்கல்பட்டு கலெக்டர், தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்
சென்னை: சென்னை பல்லாவரம் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் குரோம்பேட்டை வெற்றி தியேட்டருக்கு எதிரே செல்லும் கால்வாய், தாம்பரம் அரசு மருத்துவமனை அருகே செல்லும் கால்வாய், பல்லாவரம் பாண்ட்ஸ் சிக்னல் அருகே செல்லும் கால்வாய் ஆகியவற்றின் மூலம் வெளியேறுகிறது.. இந்த கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதாக டேவிட் மனோகர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தலைமைச்செயலாளர், செங்கல்பட்டு கலெக்டருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் வெள்ள பாதிப்பு ஏற்படுவது தொடர்கிறது என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. ரேடியல் சாலை பகுதிகளில் சிலர் நீர்வழித்தடப்பாதைகளை ஆக்கிரமித்துள்ளதால் வெள்ள பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது.

டேவிட் மனோகர் வழக்கு
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தல் டேவிட் மனோகர் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "குரோம்பேட்டை, பல்லாவரம், ஜி.எஸ்.டி. சாலை பகுதிகளில் மழைக்காலங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தொடர்கிறது இதற்கு சாலையோர கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததும், குப்பைகளை கொட்டுவதை தடுக்காததும்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் வசதியும் இல்லை.
பல்லாவரம் ஏரி
பல்லாவரம் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர், குரோம்பேட்டை வெற்றி தியேட்டருக்கு எதிரே செல்லும் கால்வாய் வழியாக வெளியேறும். மேலும் தாம்பரம் அரசு மருத்துவமனை அருகே செல்லும் கால்வாய், பல்லாவரம் பாண்ட்ஸ் சிக்னல் அருகே செல்லும் கால்வாய் ஆகியவற்றின் மூலமும் ஏரி தண்ணீர் வெளியேறும். ஆனால், இந்த கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் செல்ல வழியில்லாத நிலை இருக்கிறது. இந்த மழை நீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
தலைமை செயலாளருக்கு மனு
எனவே, மழைக்காலம் நெருங்கும் முன்பாக இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை" என்று கூறியிருந்தார்.
செங்கல்பட்டு கலெக்டருக்கு நோட்டீஸ்
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஒய்.கவிதா ஆஜராகி ஆக்கிரமிப்புகள் விவரங்களை தாக்கல் செய்த வாதிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கிற்கு 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர், செங்கல்பட்டு கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications