வில்லங்க சான்றிதழில் வில்லங்கமா? சொத்துக்களின் வில்லங்க சான்றிதழில் சிக்கலே வராது.. தமிழக அரசு அதிரடி
சென்னை: சொத்துக்களின் விற்பனையின்போது, வில்லங்க சான்றிதழில் ஏற்படும் சிக்கல்களை களைய, தமிழக அரசு அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.. அது என்ன தெரியுமா?
பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புவர்கள் அந்த சொத்தின் முந்தைய ஓனர்கள் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், வில்லங்க சான்றினை பெறுவார்கள்.

குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்று இது.. இதில் அந்த குறிப்பிட்டு சொத்து யார் வசம் இருந்து கைமாறி வந்தது என்ற அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
வில்லங்கம்: அந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும். இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய தினம், அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெறவும் வில்லங்க சான்று தேவையாக இருக்கிறது.. முன்பெல்லாம் இந்த வில்லங்க சான்றினை பெறுவதற்காக, பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டி இருந்தது. ஆனால், இப்போது, ஆன்லைன் மூலமாகவே, வில்லங்க சான்றினை பொதுமக்கள் பெற முடியும்..
வில்லங்க சான்றிதழ்: தமிழ்நாடு பதிவுத்துறை சார்பில் வழங்கப்படும் இந்த சான்றினை, இணைய வழியில் எளிய முறையில் விண்ணப்பித்து, பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எந்தவித லஞ்சமும் புரோக்கர்கள் உட்பட யாருக்குமே தர வேண்டிய அவசியமில்லை. ஆனால், வில்லங்க சான்றிதழில், ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில், ஒரே நேரத்தில் சமயத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட உட்பிரிவுகள் உருவாகும் நிலையில் சில நடைமுறை சிக்கல்கள் வந்துவிடுகின்றன.
இதுபோன்ற சொத்துக்களின் வில்லங்க சான்றிதழில், 5 உட்பிரிவுகள் வரையிலான பரிமாற்ற தகவல் அல்லது 5க்கு அப்பால் பதிவான பரிமாற்றங்களின் தகவல் மட்டும் தான் கிடைக்கிறதே தவிர, பெரிய அளவிலான குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தும்போது, அதில் குறிப்பிட்ட சில பரிமாற்ற தகவல்கள் விடுபடுவதால், சிக்கல்கள் உருவாகின்றன. அதனால்தான், இந்த சிக்கல்களை களைய, 14 பேர் கொண்ட குழு ஒன்றினை வருவாய்த்துறை அமைத்துள்ளது.
வருவாய்த்துறை: இதுகுறித்து வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.. அதில், நிலங்களின் சர்வே எண்களின் உட்பிரிவுகள் எண்ணிக்கை அதிகரிப்பால், வில்லங்க சான்றிதழில் ஏற்படும் பிரச்னைகள். அரசின் கவனத்துக்கு வந்துள்ளன.இது குறித்து ஆய்வு செய்ததில், சர்வே எண்களுக்கு புதிய உட்பிரிவுகள் உருவாக்கும்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறை சார்ந்த பிரச்னைகள் தெரியவருகின்றன.
மாற்றங்கள்: இதுகுறித்து, பல்வேறு துறை உயரதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்பட உள்ளது. இதற்காக, வருவாய், பத்திரப் பதிவு, வீட்டுவசதி, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள், 14 பேர் அடங்கிய உயர் நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விரைவில் கூட்டம் நடத்தி எடுக்கும் முடிவுகள் அடிப்படையில், வருவாய் துறையின் தமிழ் நிலம் தகவல் தொகுப்பில், மாற்றங்கள் செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications