மணல் குவாரிகளில் சிக்கிய ‘போலி’ பில்? கனிமவளத்துறை ஆபீசில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்த காரணம் இதானா?
சென்னை: சென்னை சேப்பாக்கம் கனிமவளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் விற்பனை நடப்பதாக வந்த புகார்களையடுத்து, அமலாக்கத்துறை, மணல் விற்பனையில் பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடந்திருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள், பல்வேறு குழுக்களாக பிரிந்து தமிழ்நாட்டின் திண்டுக்கல், வேலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கணக்கில் வராமல் பெருமளவில் மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக ஆஃப்லைனிலும் விற்பனை நடப்பதாக சந்தேகிக்கும் அமலாக்கத்துறை, மணல் அள்ளும் மையங்கள், மணல் விற்பனை செய்யப்படும் இடங்கள், மணல் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் ரத்தினம், அவரது மைத்துனர் வீடு மற்றும் மற்றொரு தொழிலதிபரான கோவிந்தன் ஆகியோர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவரின் அலுவலகம் உள்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். அதேபோல, கரூர், தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் குவாரிகள், மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது அமலாக்கத்துறை.

சென்னையை பொறுத்தவரை தி.நகரில் உள்ள ராமச்சந்திரன் வீடு, ஆலந்தூரில் உள்ள நீர்வளத்துறை பொறியாளர் வீடு, அண்ணாநகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீடு, முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணி திலகம் என்ற பொறியாளர் வீடு, தேனாம்பேட்டை குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். 4 அதிகாரிகள் அங்கு மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும், மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்களின் வீடுகள், மணல் குவாரிகளில் ரெய்டு நடைபெற்று வரும் நிலையில், கனிமவளத்துறை அலுவலகத்திலும் ED அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் போலி ரசீதுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே கனிமவளத்துறை அலுவலகத்திலும் சோதனை நடப்பதாகத் தெரிகிறது. அங்கு கனிமவளத்துறை அதிகாரிகளிடமும், அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications