சச்சினுக்கு கிடைத்த வரி விலக்கு.. விஜய்க்கு "மட்டும்" அபராதமா?.. உண்மையில் நடந்தது என்ன? - பின்னணி
சென்னை: பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாயை சென்னை ஹைகோர்ட் அபராதமாக விதித்துள்ளது. கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கார் வாங்க நுழைவு வரி விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் விஜய்க்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2000ல் இருந்து கடந்த சில வருடங்கள் வரை நுழைவு வரி மிக அதிகமாக இருந்தது. முக்கியமாக கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய கூடுதல் நுழைவு வரி விதிக்கப்பட்டது. அப்படி நுழைவு வரி உச்சத்தில் இருந்த 2002ல்தான் கிரிக்கெட் வீரர் சச்சின் இங்கிலாந்தில் இருந்து ஃபெராரி கார் ஒன்றை இறக்குமதி செய்தார்.
இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடர் ஆட சென்ற சச்சினுக்கு 2002ல் பிரபல ரேஸ் கார் சாம்பியன் மைக்கல் ஸ்கும்ச்சார் இலவசமாக ஃபெராரி 360 மாடனா காரை பரிசாக வழங்கினார். இந்த காரின் மதிப்பு 2.1 கோடி ரூபாய்

வரி
இந்த கார் சச்சினுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த காரை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கு நுழைவு வரி கட்ட வேண்டும். இதற்கு நுழைவு வரி மட்டுமே தனியாக ரூ.1.6 கோடி ஆகும். இதன் காரணமாக அப்போது சச்சின் நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டார். அப்போதைய வருமான வரித்துறை அமைச்சர் பிரமோத் மகாஜனிடம் இது தொடர்பாக கடிதம் கொடுத்தார்.

விலக்கு
சச்சின் கேட்டவுடன் ஏனோ அப்போது அவருக்கு வரி விலக்கும் கிடைத்தது . அப்போது வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்தது. இந்த சம்பவம் பெரிய விமர்சனத்தை சந்தித்தது. பல கோடிகளை சம்பாதிக்கும் சச்சினுக்கு வரி விலக்கு எதற்கு. இதே விலக்கு ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவைக்கு அளிக்கப்படுமா என்று கேள்விகள், விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

சச்சின்
கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சச்சின் இப்படி செய்தது தவறு. அவர்தான் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அவரே இப்படி செய்ய கூடாது, அவர் என்ன கடனில் கஷ்டப்படுகிறாரா? என்று பலரும் விமர்சனங்கள் வைத்தனர். ஆனால் கடைசி வரை சச்சினிடம் வரியும் வசூலிக்கப்படவில்லை, அபராதமும் விதிக்கப்படவில்லை. சச்சின் கடைசி வரை வரி கட்டாத நிலையில் ஃபியட் நிறுவனம் இந்த பிரச்னையை முடிக்கும் வகையில் நுழைவு வரி கட்டியது. இந்த நிலையில் தொடர் விமர்சனங்கள் காரணமாக அந்த காரை குஜராத்தில் வியாபாரி ஒருவருக்கு 1.2 கோடி ரூபாய்க்கு சச்சின் விற்பனை செய்துவிட்டார்.

விஜய்
அதன்பின் வரிசையாக பல்வேறு பிரபலங்கள் இதேபோல் வெளிநாட்டு காரை இறக்குமதி செய்ய நுழைவு வரி விலக்கு கேட்டனர். பல பாலிவுட் பிரபலங்கள் கேட்டனர். கிரிக்கெட் வீரர்கள் அசாருதீன், கபில் தேவ் ஆகியோர் இதே கோரிக்கையை வைத்தனர். ஆனால் அவர்களின் கார்களுக்கு நுழைவு வரி விலக்கு கொடுக்கப்படவில்லை. இப்படி கார் இறக்குமதிம் நுழைவு வரி விலக்கு தொடர்பாக பல பிரபலங்கள் கோரிக்கைகளை வைத்தனர்.

2012
இப்படி பலரும் வரிசையாக கோரிக்கை வைத்த சமயத்தில்தான் 2012ல் நடிகர் விஜயும் கார் இறக்குமதிக்கு நுழைவு வரி விலக்கு கோரிக்கை வைத்தார். 2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்து வாங்கியிருந்தார். இதன் விலை 8 கோடி ருபாய், இறக்குமதி நுழைவு வரி 1.6 கோடி ரூபாய். இந்த காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு இருந்தார். ஆனால் இவருக்கு வரி விலக்கு அளிக்கப்படாத நிலையில் உடனே உரிய வரியை செலுத்த வேண்டும் என்று வணிக வரித் துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

வாதம்
இந்த காரை விஜய் பதிவு செய்ய முயன்றும் முடியவில்லை. இறக்குமதி நுழைவு வரியை செலுத்தி இருந்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று வட்டார போக்குவரத்து அலுவலகம் கூறிவிட்டது. இதை எதிர்த்து காருக்கு இறக்குமதி வரி விலக்கு வேண்டும் என்று விஐய் தொடுத்த வழக்கில்தான் இன்று அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பல பிரபலங்கள் இதே கோரிக்கையை வைத்ததால்தான் விஜய்யும் அதே கோரிக்கையை வைத்தார்.

கண்டிப்பு
ஆனால் விஜய்க்கு மட்டும் இதில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகர்கள் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும், இப்படி செயல்பட கூடாது என்று சென்னை ஹைகோர்ட் கண்டித்தும் உள்ளது.
2002ல் சச்சினுக்கு வரி விலக்கு வழங்கப்பட்ட நிலையில் அதே போல தங்களுக்கும் வரி விலக்கு வேண்டி பல பிரபலங்கள் கோரிக்கைகளை வைத்தனர். 2 கோடி ரூபாய் காருக்கு வரி மட்டுமே 1 கோடி ரூபாய் இருப்பதால் இது போன்ற கோரிக்கைகள் அப்போது அதிகம் வைக்கப்பட்டன. இதே கோரிக்கையைத்தான் விஜய்யும் வைத்தார்.

ஆனால்
ஆனால் சச்சினை தவிர வேறு யாருக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. இதுவே தற்போது விஜய்க்கு எதிராக திரும்பி உள்ளது, அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது., 1962 சுங்கத்துறை விதி 25ன் படி நற்காரியங்கள், சமுதாயத்திற்கு அவசியமான அவசரமான விஷயங்களுக்கு மட்டுமே இதுபோன்ற இறக்குமதி, நுழைவு வரிவிலக்கு அளிக்க முடியும் என்பதால் பிரபலங்கள் (சச்சின் தவிர) யாருக்கும் கார் வாங்க இறக்குமதி,நுழைவு வரி விலக்கு அளிக்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications