பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. 8.25% வட்டிப் பணம் இந்த மாதமே கணக்கில் ஏறும்!
சென்னை: தனியார் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பலருக்கும் பொதுவாக EPFO கணக்கு தொடங்கப்பட்டு PF பணம் வழங்கப்படும். இந்த பணத்திற்கு வட்டி விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நீண்ட காலமாக இதற்கான வட்டி வழங்கப்படாமல் இருந்த நிலையில் விரைவில் வட்டி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) சேமிப்புகளுக்கு 2025-26ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக வழங்க மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 7 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைய உள்ளனர். இந்த வட்டிப் பணம் நடப்பு ஜூன் மாத இறுதிக்குள் சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், கடந்த மார்ச் 2, 2026 அன்று நடைபெற்ற ஈபிஎஃப்ஓ (EPFO) அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டத்தில் இந்த 8.25 சதவீத வட்டி விகிதம் பரிந்துரைக்கப்பட்டது. பிஎஃப் கணக்குகளுக்கான வட்டிக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிப்பதால், இந்தத் திட்டத்திற்கு நிதி அமைச்சகத்தின் இறுதி ஒப்புதல் பெறப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து 3வது ஆண்டாக ஒரே வட்டி விகிதம்:
பிஎஃப் வட்டி விகிதம் மாற்றமின்றி 8.25 சதவீதமாகவே தொடர்வது இது மூன்றாவது நிதியாண்டாகும். இதற்கு முன்னர் 2023-24 மற்றும் 2024-25 ஆகிய நிதியாண்டுகளிலும் இதே 8.25 சதவீத வட்டி விகிதமே வழங்கப்பட்டது. உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரச் சூழலில் பல்வேறு மாற்றங்கள் நிலவி வந்தபோதிலும், சந்தாதாரர்களுக்கு நிலையான வருவாயை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் பிஎஃப் வட்டி விகித நிலவரம்:
2025-26: 8.25%
2024-25: 8.25%
2023-24: 8.25%
2022-23: 8.15%
2021-22: 8.10%
2020-21: 8.50%
2019-20: 8.50%
கடந்த 2021-22 நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட 8.10 சதவீத வட்டியானது, 1977-78க்கு பிறகு பதிவான மிகக் குறைந்த வட்டி விகிதமாகும். அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வட்டி விகிதம் கணிசமாக உயர்ந்து அதே நிலையில் நீடிக்கிறது.
புதிய டிஜிட்டல் முறையால் விரைவான வரவு:
வழக்கமாக மத்திய அரசு வட்டி விகிதத்தை அறிவித்த பிறகு, அது ஊழியர்களின் கணக்குகளில் பிரதிபலிக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். ஆனால், தற்போது ஈபிஎஃப்ஓ அறிமுகப்படுத்தியுள்ள மேம்படுத்தப்பட்ட புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப முறையினால் (Revamped Digital Ecosystem) இந்த ஆண்டு வட்டிப் பணம் கணக்கிடப்பட்டு, மிக விரைவாக கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்கள் தங்களது பிஎஃப் பாஸ்புக்கில் வட்டி விவரங்களை அறிவதற்கான காலதாமதம் குறையும்.
இருப்பைச் சரிபார்க்கும் வழிமுறைகள்:
வட்டிப் பணம் கணக்கில் ஏறியவுடன் சந்தாதாரர்கள் தங்களின் கணக்கு இருப்பை உமாங் செயலி (UMANG App), ஈபிஎஃப்ஓ இணையதளம் (EPFO Portal) ஆகியவற்றின் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தோ அல்லது 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் (SMS) அனுப்பியோ தங்களின் பிஎஃப் பாஸ்புக் விவரங்களை அறிந்து கொள்ள முடியும் என ஈபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications