பிஎஃப் எனும் அட்சய பாத்திரம்.. மாதச் சம்பளம் வாங்குவோர்.. இதை மட்டும் செய்தால் பண மழை கொட்டும்
சென்னை: ஒரு நிரந்தரமான நிறுவனத்தில் மாத சம்பளம் வாங்கும் அனைவருக்குமே பிஎஃப் பணம் பிடிப்பார்கள். அவர்கள் பங்களிப்பாக ஒரு தொகை, நிறுவனம் சார்பில் ஒரு தொகை போடுவார்கள். இதுதவிர ஊழியர்களும் தங்கள் பிஎஃப் கணக்கில் தானாக முன்வந்து கூடுதலாக ஒவ்வொரு மாதமும் பணத்தை சேமிப்பதற்கான திட்டம் இருக்கிறது. தன்னார்வ வருங்கால வைப்பு நிதி ( VPF) திட்டம் இருக்கிறது. இந்த திட்டப்படி மாதம் ஐந்து ஆயிரம் நீங்கள் சேமித்து வந்தால் 58 வயதில் பணமழை கொட்டும் எப்படி என்பதை பார்ப்போம்.
VPF என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வாலன்டரி பிஎஃப் என்பது ஏற்கனவே பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் சம்பளம் பெறும் ஊழியர்களுக்காகவே மத்திய அரசால் உருவாக்கப்பட்டது ஆகும் .எனவே பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் மாத சம்பளம் வாங்கும் எந்த ஊழியரும் VPF திட்டத்தை தேர்வு செய்ய முடியும்.

இந்த திட்டத்தை பொறுத்தவரை நீங்கள் பிஎஃபில் பணம் சேமிக்க முடிவு செய்தால், ஆண்டுக்கு ஒரு முறை உங்களிடம் நிறுவனம் VPF கான்ட்ரிபூசன் பற்றி கேட்கும். அப்போது நீங்கள் 1000, 2000, 5000, என எந்த தொகையை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். இந்த பங்களிப்புக்கு வரம்பு எப்படி என்றால். அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் 100% வரை கூடுதலாகப் பங்களிக்கலாம். இதற்கு அதிகபட்ச வரம்பு என்று எதுவும் கிடையாது.
VPF-க்கான வட்டி விகிதம் பிஎஃப் வட்டி விகிதத்திற்கு சமமாக இருக்கும். தற்போதைய நிலையில் வட்டி விகிதம் சுமார் 8.25% ஆக இருக்கிறது. இந்த வட்டி விகிதம் வேறு எந்த தனிநபர் சேமிப்பிலும் இல்லை.எனவே சேமிக்க விரும்புவோருக்கு இது சூப்பர் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் வரி சலுகையும் உண்டு. VPF-ல் செய்யப்படும் பங்களிப்புகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு பெறலாம் (ஓர் ஆண்டிற்கு ₹1.5 லட்சம் வரை). மேலும், வட்டி மற்றும் முதிர்வுத் தொகையும் (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) வரி விலக்கு கிடைக்கிறது.
அதேபோல் VPF-க்குத் தனியாகக் கணக்கு ஓபன் பண்ண தேவையில்லை. இது உங்கள் இருக்கும் பிஎஃப் கணக்கிலேயே ஒரு பகுதியாகவே இருக்கும். அதேநேரம் VPF-ல் சேர விரும்பும் ஊழியர் தனது நிறுவனத்தின் மூலமாக எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும். முதலில் கூறியபடியே மார்ச் மாதமே உங்களுக்கு இந்த மெயில் வரும். அதனை ஏற்று நீங்கள் 1000 முதல் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.
ஒருவேளை உங்களுக்கு 30 வயது இப்போது ஆகிறது.. நீங்கள் 58 வயதில் ஓய்வு பெறுகிறார் என்றால், அவர் மொத்தம் 28 ஆண்டுகளுக்கு மாதம் 500 முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு மட்டும் எவ்வளவு கிடைக்கும் என்பதை பார்ப்போம்,
மாதாந்திர கூடுதல் பங்களிப்பு : ₹5,000
ஆண்டு கூடுதல் பங்களிப்பு : ₹5,000 × 12 = ₹60,000
முதலீட்டு காலம் : 58 - 30 = 28 ஆண்டுகள்
வட்டி விகிதம் : VPF-ன் வட்டி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். தற்போதைய விகிதமான 8.25% என்ற ஒரு நிலையான வட்டி விகிதமாக எடுத்துக் கொள்வோம். சம்பளம் உயர்வு மற்றும் வட்டி விகித மாற்றங்கள் இல்லாமல், 28 வருட முடிவில் தோராயமாக எவ்வளவு முதிர்வுத் தொகை கிடைக்கும் என்பதை பாருங்கள்
மொத்த முதலீடு (28 வருடங்களுக்கு) ₹5,000 × 12 மாதங்கள் × 28 வருடங்கள் ₹16,80,000
ஈட்டப்பட்ட தோராயமான வட்டித் தொகை கூட்டு வட்டி கணக்கீட்டின்படி (8.25% வட்டிக்கு) சுமார் ₹54,55,000
மொத்த முதிர்வுத் தொகை (VPF) (தோராயமாக) முதலீடு + வட்டி சுமார் ₹71,35,000
எனவே உங்களுக்கு 30 வயது என்றால் தொடர்ந்து 28 ஆண்டுகளுக்கு மாதம் ₹5,000 VPF-ல் பங்களித்து வந்தால் (வட்டி விகிதம் 8.25% என மாறாமல் இருக்கும் என்றால), 58 வயதில் உங்களுக்கு VPF சேமிப்பின் மதிப்பு தோராயமாக ₹71.35 லட்சம் கிடைக்கும். அதேநேரம் இதுதவிர பிஎப் கணக்கில் உங்களுக்கு மாதம் ஒரு பங்களிப்பும் பிடிப்பார்கள்.. எல்லாம் சேர்த்தால் கோடிகளை தாண்டும்.. நிச்சயம் மிகப்பெரிய சேமிப்பு உங்களுக்கு கிடைக்கும்.. உண்மையான பிஎஃப் சேமிப்பு தொகை என்பது இரண்டையும் சேர்த்து வருவது. அது நீங்களே எதிர்பார்க்காத அளவிற்கு இருக்கும்.
ஆனால் முக்கியமான விஷயம்.. பிஎஃப்பில் பணம் எடுப்பதை முடிந்த வரை தவிருங்கள். பலரும் அவசரத்தின் போது பிஎஃபில் தான் கை வைக்கிறார்கள். கை வைக்காமல் இருந்தால், உங்களை பிஎஃப் பணமே கோடீஸ்வரன் ஆக்கிவிடும். பணமழை கொட்டும். வட்டி அதிகமாக கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் கைவைப்பவர்களும் உள்ளார்கள். அவர்களுக்கு அன்றைய பிரச்சனை தீரும்.. ஆனால் நிரந்தரமாக வர வேண்டிய பலன் கிடைக்காமல் போய்விடும்.












Click it and Unblock the Notifications