அஜித்குமார் உடலில் 18 இடங்களில் காயம்! ஸ்டாலின் காவல்துறையில் அப்பட்டமாக கொலை! கொந்தளித்த எடப்பாடி
சென்னை: திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது எனவும், இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக அஜித்குமார் என்பவர் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே அந்த கோவிலுக்குச் சென்ற மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் தன்னுடைய நகைகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.
புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணுக்கு உதவிய அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரின் விசாரணையின் போது அஜித்குமார் திடீரென உயிரிழந்தார். அஜித் குமாரை கொடூரமாக தாக்கி போலீசார் தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டி அவரது உறவினர்கள் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அஜித்குமாரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்ட நிலையில் பலத்த பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. மேலும், அஜித்குமாரை தாக்கியதாக புகாருக்குள்ளான ஆறு காவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஜித்குமார் மரணம், முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை! ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும்.
இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் "வலிப்பு" என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை. "Deja Vu" எல்லாம் இல்லை- விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது முக ஸ்டாலின் எந்த பச்சைப்பொய்யை சட்டப்பேரவையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது ஸ்டாலினின் காவல்துறை.
நீங்கள் இப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்வீர்கள் எனத் தெரிந்து தான், எனது அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் #JusticeForAjithkumar பதாகைகளை ஏந்தி, நீதிக்கான குரலாக ஒலித்தனர். நாடு முழுக்க #JusticeForAjithkumar #NationWithAjith என பெரும் அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் முக ஸ்டாலின் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்? "ஆய்வுக் கூட்டம் நடத்துகிறோம்; CBCID-க்கு மாற்றுகிறோம்" என்ற உங்கள் நாடகங்களை சில ஊடகங்கள் நம்பலாம். மக்களும் சரி, நாங்களும் சரி- துளி கூட நம்பவில்லை!
பொம்மை முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள். போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான பொம்மை முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்! வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் திரு. ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்!" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications