Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொப்புள் கொடி அறுத்த இர்பான்..வானுக்கும் பூமிக்கும் குதித்த மா.சு.! இப்போ என்னாச்சு? எடப்பாடி நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த யூ டியூபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று முதலில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அந்த நபர் வாரிசு அமைச்சர் உதயநிதியுடன் அமர்ந்து சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்தவுடன் அப்படியே பம்மி பதுங்குவதும், இது கொலைக் குற்றமா? என்று பத்திரிகையாளர்களிடமே கேள்வி கேட்பதும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தில் தற்போது நடைபெறும் நிர்வாகத் திறனற்ற திரு. ஸ்டாலினின் விடியா தி.மு.க. ஆட்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? என்ற சந்தேகம் அப்பாவி மக்களின் மனதில் எழுந்துள்ளது.

edappadi palaniswami aiadmk irfan

அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கடந்த 42 மாதகால திமுக ஆட்சியில் நடைபெறும் கொடுமைகள் கணக்கிலடங்கா!

கால்பந்து வீராங்கனைக்கு தவறான சிகிச்சை: சென்னை, வியாசர்பாடி கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திரு. ரவி என்பவரின் 17 வயது மகளும், கால்பந்து வீராங்கனையுமான கல்லூரி மாணவி பிரியா, கால் தசைப் பிடிப்புக்காக பெரியார் நகர் மருத்துவமனைக்கு 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிகிச்சைக்காக சென்ற போது, அரசு மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தாலும், கவனக் குறைவாலும் அவரது வலது காலை இழந்ததோடு, அவரது உயிரையும் பறிகொடுத்தது இன்னும் தமிழக மக்களின் மனதில் இருந்து அகலவில்லை.

காவலர் மகளுக்கு தவறான சிகிச்சை: சென்னை, ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த திரு. கோதண்டபாணி அவர்களின் 7 வயது பெண் குழந்தைக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால், வலது கால் ஊனம் ஏற்பட்டதாகவும், பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தலைமைச் செயலகத்தில் தனது மகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அவலமும் நடந்தேறியது.

சளி தொல்லைக்கு நாய் கடி ஊசி: 2023-ஜூன் மாதம் கடலூர் மாவட்டம், கோதண்டராமபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திரு. கருணாகரன், சளி தொல்லையால் அவதியுற்ற தனது மகள் சாதனாவை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, மருத்துவப் பணியாளர்களின் அலட்சியத்தால் சளிக்கு ஊசி போடுவதற்கு பதிலாக, இரண்டு முறை நாய் கடி ஊசி போட்ட அவலமும் நடந்தேறியது.

விளம்பர மோக மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சியில் இளம் பொறியியல் மாணவர் உயிரிழந்த பரிதாபம்: இரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்த எத்தனையோ வழிமுறைகள் இருக்கையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்த, விளம்பர மோகத்துடன் மதுரையில் 10 கி.மீ. தூரத்திற்கு குருதிதான விழிப்புணர்வு மாரத்தான்-ஐ விடியா திமுக ஆட்சியின் சுகாதாரத் துறை அமைச்சர் நடத்தியபோது, கண்டிப்பாக மாணவர்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை வற்புறுத்தியதாகவும், அதனால் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களில், மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் தினேஷ் மயங்கி விழுந்து 23.7.2023 அன்று உயிரிழந்த சம்பவம்.

edappadi palaniswami aiadmk irfan

14.11.2023 நாளிட்ட எனது அறிக்கையில், சென்னை மாநகர ஆணையாளர், அடிபட்ட தனது உதவியாளருக்கு (திரு. ராமன்) மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய சென்னை மாநகராட்சி மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கு ஒரு மருத்துவர்கூட இல்லாத நிலையில், தனியார் மருத்துவமனையில் தனது உதவியாளருக்கு மருத்துவம் பார்த்துள்ளார். மேலும், அவரை மேல்சிகிச்சைக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்ப அவசரக் கட்டுப்பாட்டு அறை மூலம் ஆம்புலன்ஸை அழைத்தும், மிகுந்த காலதாமதத்திற்குப் பின்னரே ஆம்புலன்ஸ் வந்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் செயல்படாத தன்மைக்கு இது ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த விடியா திமுக ஆட்சியில் பல ஆண்டுகளாக துறையின் உயர் அதிகாரியாக இருந்த அவரது உதவியாளருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?

அதே அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பரம்பூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் ஆய்வுக்காகச் சென்றபோது, அங்கு அரசு மருத்துவர்கள் இல்லாததால் விபத்தில் காயமடைந்த நோயாளி பலமணி நேரம் காயத்துடன் அவதியுற்றதையடுத்து, டாக்டர் விஜயபாஸ்கர், தான் ஒரு மருத்துவர் என்ற முறையில் விபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெண் குழந்தையின் வலது கை நீக்கப்பட்டதுடன், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி கடைசியில் தங்கள் குழந்தையை இழந்துவிட்டோம் என்று அந்தக் குழந்தையின் தாய் கண்ணீருடன் பேட்டி அளித்தது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

மேலும், 2023 தீபாவளி அன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் வெடி விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாமல், மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சை அளித்த நிகழ்வும் ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

edappadi palaniswami aiadmk irfan

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரிரு நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்த குழந்தையின் உடல் ஈவு இரக்கம் இல்லாமல் கட்டைப் பையில் வைத்துக் கொடுத்த அவலம் அரங்கேறியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு முன்பு ஒருமுறை அட்டைப் பெட்டியில் வைத்து உயிரிழந்த பிஞ்சுக் குழந்தையின் உடல் கொடுக்கப்பட்டது. அப்போதே இதற்கு நான் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தேன்.

கடந்த மாதம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் தங்குவதற்கான விடுதியை பணிகள் முடிந்தும், பயன்பாட்டிற்கு திறந்து வைக்காத காரணத்தால், சென்ற மாதம் பணி முடித்து 30 கி.மீ. தூரமுள்ள தனது வீட்டில் ஒய்வெடுக்கச் சென்ற மருத்துவர் மனோரஞ்சிதன் சாலை விபத்தில் தனது இன்னுயிரை இழந்துள்ளார். இதற்குக் காரணம் பணிகள் முடிந்தும், மருத்துவர்கள் தங்கும் விடுதியை இந்த அரசு திறக்காததே என்று மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்படி பல நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கடந்த வாரம் கிண்டி மருத்துவமனையில் நோயாளியின் உதவியாளர் மருத்துவரைத் தாக்கிய சம்பவமும், அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டமும் நடந்தேறியது. இந்நிலையில், அடுத்த நாள் சிகிச்சைக்கு வந்த (விக்னேஷ்) நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தால் அவர் உயிரிழந்த சோகமும், அதைத் தொடர்ந்து, பாதிப்படைந்த குடும்பத்தினரின் அழுகுரல் காண்போரை கண் கலங்க வைத்தது. மருத்துவர்களின் கோரிக்கையை காலத்தே பரிசீலித்திருந்தால், இந்த நோயாளியின் இறப்பை இந்த அரசு தடுத்திருக்க முடியும். மருத்துவர்கள் மீதான தாக்குதல் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், அவ்வப்போது மருத்துவர்கள் அரசிடம் எடுத்துக் கூறிய நிலையில், மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுவதால்தான் மருத்துவர்கள் பொங்கி எழுந்ததாகத் தெரிவிக்கின்றனர். எனவே, மருத்துவர்களின் பாதுகாப்புக்கு இந்த அரசு உரிய உத்தரவாதத்தை அளித்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மருத்துவத் துறையில் தொடர்ந்து நடக்கும் பல விரும்பத் தகாத நிகழ்வுகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் அடிக்கடி இந்த அரசின் கவனத்திற்கு சுட்டிக்காட்டி வரும் நிலையில், அவைகளைத் தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், எனக்கு முரண்பாடான பதில்களை அளிப்பதிலேயே இந்தத் துறையை கவனிக்கும் மந்திரி மா. சுப்பிரமணியம் குறியாக இருந்து, திறமையற்ற முறையில் செயல்படுகிறாரே தவிர, மக்களின் உயிரைக் காக்கும் பணியில் அக்கறையின்றி இருப்பது வேதனையான ஒன்றாகும்.

சட்ட விரோதமாக செயல்பட்டு, 'குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த யூ டியூபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று முதலில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அந்த நபர் வாரிசு அமைச்சர் உதயநிதியுடன் அமர்ந்து சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்தவுடன் அப்படியே பம்மி பதுங்குவதும், இது கொலைக் குற்றமா? என்று பத்திரிகையாளர்களிடமே கேள்வி கேட்பதும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த யூ டியூபர் இர்ஃபான், குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் எந்தவிதமான நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை என்பது புரியாத புதிர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சாதனைத் துறையாக விளங்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை, திரு. ஸ்டாலினின் விடியா திமுக ஆட்சியில் சர்ச்சைக்குரிய துறையாக மாறி, நோயாளிகளின் உயிருடன் விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.

தவறிழைத்தவர்கள் சாமான்ய மக்களாக இருந்தால் அவர்களுக்கு சட்டத்தை தீவிரமாக கடைபிடிப்பதும், உச்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருந்தால் சட்டத்தை காற்றில் பறக்கவிடுவதுமாக, மக்களைக் காக்கும் மருத்துவத் துறையை சீரழித்து, முதலமைச்சரின் குடும்பத்துக்கு கொத்தடிமை வேலை பார்ப்பவர்கள் மட்டுமே மந்திரிகளாக செயல்படுவார்கள் என்று எழுதப்படாத விதி ஒன்றை பொம்மை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உருவாக்கி செயல்படுவது சர்வாதிகாரத்தின் உச்சம்.

தமிழக மக்கள் பொறுமைசாலிகள் மட்டுமல்ல - திறமைசாலிகள்... நேரம் வரும் போது இந்த அராஜக ஆட்சியாளர்களை ஓட ஓட விரட்டி அடிக்கப்போவது திண்ணம்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+