ஆற்றில் போட்டாலும் அளவோடு போடோணும்.. "எப்படி" கேட்டாலும் இவ்ளோதான்.. சாதுர்ய ஈபிஎஸ்!!
சென்னை: பாமக, பாஜகவுக்கு அதிக எண்ணிக்கையிலான சீட்டுகளை கொடுக்காமல் மிகவும் சாதுர்யமாக டீலை பேசி முடித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. "எப்படி" கேட்டாலும் தான் ரொம்ப இறங்கிப் போக மாட்டேன் என்பதையும் முதல்வர் நிரூபித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக கூட்டணிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 20 ஆண்டுகள் கழித்து சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களைவிட தற்போது ஒதுக்கப்பட்ட இடங்கள் குறைவாகவே இருக்கிறது.

அன்புமணி
எனினும் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் நோக்கமே வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான். இந்த இடஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு கண்டால் தங்கள் சமூக மக்களும் கல்வி, வேலைவாய்ப்பில் கைதேர்ந்து முன்னுக்கு வருவர் என்பதற்காக இந்த கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்தது.

இடஒதுக்கீடு
இந்த கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்ற வேண்டும் என பாமகவினர் போராட்டம் நடத்தினர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எந்த பதிலையும் அளிக்கவில்லை. கடைசியில் சட்டசபை கூட்டத்தொடர் முடியப் போகும் தருவாயில், சத்தமில்லாமல் வன்னியர் இடஒதுக்கீட்டை அறிவித்து அச்சமூக மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றினார்.

நகைக் கடன் தள்ளுபடி
மேலும் விவசாய கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி என சூப்பர் திட்டங்களை அறிவித்துள்ளார். அதேசமயம், கூட்டணி கட்சியாக இருந்தாலும் அள்ளிக் கொடுக்காமல் பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தார். அது போல் பாஜகவுடன் 3 நாட்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பாஜகவினர் கோரிக்கை
ஆரம்பத்தில் 100 தொகுதி என்று பேசிக் கொண்டிருந்தது பாஜக. பிறகு பகிரங்கமாகவே 60 என்றனர். பின்னர் படிப்படியாக இறங்கி 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கோரி வந்தனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ பாஜகவாகவே இருந்தாலும் வாக்கு வங்கி, மக்கள் செல்வாக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 20 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கீடு செய்திருந்தார். அது போல் தேமுதிகவுக்கும் அவர்கள் கேட்ட தொகுதி எண்ணிக்கையை ஒதுக்கக் கூடாது என்பதில் கறாராக உள்ளார்.

அதிமுக
தேமுதிகவினர் 40லிருந்து 25 தொகுதிகளுக்கு வந்துள்ளார்கள். ஆனால் அதிமுகவோ 15 முதல் 18 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்க முடியும் என்கிறது. இவர்களுக்கு 20 தொகுதிகளுக்குள்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது. அது போல் சசிகலாவையும் அரசியலை விட்டு விலக வைத்து, அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வைத்தாகிவிட்டது.

தொகுதி பங்கீடு
இப்படி மல்டி டாஸ்க்கிங்கில் அசத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி . இதன் மூலம் சாதுர்யமிக்க அரசியல்வாதியாக உருவெடுத்து வருகிறார். அதிமுக நிர்வாகிகளே வியக்கும் அளவுக்கான வேகத்தையும் விவேகத்தையும் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பாமகவும் சரி, பாஜகவும் சரி ஹேப்பிதான். இது போன்று கூட்டணிக்குள் அமைதியான சூழலையும் முதல்வர் ஏற்படுத்திவிட்டார்.












Click it and Unblock the Notifications