மெகா ட்விஸ்ட்.. சற்று நேரத்தில் ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அதிமுகவின் மாஸ்டர்பிளான்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை இன்று சந்திக்கிறார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை 3.30 மணிக்கு சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி என்ன நோக்கத்தோடு சந்திக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் தனது மெஜாரிட்டியை நிரூபிக்கப் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், இ.பி.எஸ்-ஸின் இந்தத் திடீர் மூவ் எதற்காக என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி வசம் உள்ள பலம் என்ன?
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (TVK): 108 இடங்கள்
திமுக (DMK): 59 இடங்கள்
அதிமுக (AIADMK): 47 இடங்கள்
விஜய்யின் கட்சி தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், அ.தி.மு.க-வின் இந்த 47 இடங்கள் ஆட்சி மாற்றத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.
ரிசார்ட் பாலிடிக்ஸ்: புதுச்சேரியில் எம்.எல்.ஏ-க்கள்!
தற்போது அ.தி.மு.க-விற்குள் ஒரு மிகப்பெரிய உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. சுமார் 15 முதல் 25எம்.எல்.ஏ-க்கள் வரை தற்போது புதுச்சேரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் (Resort) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் விஜய்யின் 'தவெக' (TVK) கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இ.பி.எஸ்-ஸிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மீதம் உள்ள எம்எல்ஏக்களை வேறு ஒரு ரிசார்ட்டில் எடப்பாடி தங்க வைத்துள்ளார்.
அ.தி.மு.க உடைவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிக்க 32 எம்.எல்.ஏ-க்கள் தேவை. தற்போது அந்த எண்ணிக்கையை நெருங்கிக் கொண்டிருப்பதால் இ.பி.எஸ் கடும் நெருக்கடியில் உள்ளார்.
அதிகார மையத்தில் மோதல்: இபிஎஸ்ஸின் பிடிவாதம்
தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெறுவதற்காக ஆட்சி அமைக்க அதிமுகவின் ஆதரவை நாடியது. இது தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர். ஆரம்பத்தில் இதற்குப் பச்சைக்கொடி காட்டிய பழனிசாமி, ஒரு நிபந்தனையை முன்வைத்தார்.
தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே இணைந்த பிரத்யேகக் கூட்டணியை அவர் விரும்பினார். "ஆட்சியில் அதிமுகவின் பங்கு மேலோங்கி இருக்க வேண்டும்; அரசு நிர்வாகத்தில் முழு அதிகாரம் கொண்ட ஒரு அங்கமாக அதிமுக இருக்க வேண்டும்" என்பதே பழனிசாமியின் நோக்கமாக இருந்தது. தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும், அதிமுக எம்.எல்.ஏ.வுமான லீமா ரோஸ் வழியாக இதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
விஜய்யின் வியூகம்: ஏன் முறிந்தது கூட்டணி?
இருப்பினும், எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனையை விஜய் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதிமுகவிடம் மட்டும் பிணைக்கைதியாக சிக்கிக்கொள்ள விஜய் விரும்பவில்லை. மாறாக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் இதர பிராந்தியக் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு பரந்த கூட்டணியை உருவாக்க அவர் காய்நகர்த்தினார்.
செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தைகள் புதன்கிழமை நண்பகல் வாக்கில் முறிந்தன. குறிப்பாக, தவெக-விற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க முன்வந்த காங்கிரஸ், "மதவாத சக்திகளுடன் (பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள்) தொடர்பு கொள்ளக்கூடாது" என்ற கோரிக்கையை முன்வைத்தது. பல கட்சிகள் உள்ள கூட்டணியில் அதிமுகவின் செல்வாக்கு குறையும் என்பதாலும், முடிவெடுக்கும் அதிகாரம் தன்னிடம் இருக்காது என்பதாலும் பழனிசாமி இந்தப் பேச்சுவார்த்தையில் இருந்து பின்வாங்கினார்.
குதிரை பேரச்சம்: விடுதிகளில் எம்.எல்.ஏ.க்கள்
பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்களை வளைக்க தவெக மற்றும் பிற தரப்புகள் முயற்சி செய்யலாம் என்ற அச்சம் அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க, பல எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக அண்டை மாநிலமான புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதிகளுக்குப் பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிரக் காவல் போடப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை இன்று சந்திக்கிறார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை 3.30 மணிக்கு சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி என்ன நோக்கத்தோடு சந்திக்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications