பொதுச்செயலாளர் தேர்தலை இபிஎஸ் தரப்பால் நடத்த முடியாது.. அடுத்த நடவடிக்கை என்ன? வைத்திலிங்கம் பரபர
எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த முழுமையான வெற்றி இது கிடையாது என்று ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை: உச்ச நீதிமன்றம் பொதுக்குழு நடத்தியது செல்லும் என்று சொல்லியிருக்கிறதே தவிர தீர்மானங்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்றும் இதனால் இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த முழுமையான வெற்றி இது கிடையாது என்று ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை கோஷம் ஒலித்தது. தலைமைப்பதவியை யார் கைப்பற்றுவது என்பது தொடர்பாக இரு ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டது.
இதையடுத்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுவிற்கு எதிராக மேல் முறையீடு
இந்த பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது.

பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி மாதம் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஜனவரி 11-ந் தேதி ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த மேல் முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்ததுள்ளது. இதன்படி, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.

முழுமையான வெற்றி கிடையாது
இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு வைத்திலிங்கம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உச்ச நீதிமன்றம் பொதுக்குழு நடத்தியது செல்லும் என்று சொல்லியிருக்கிறதே தவிர தீர்மானங்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.. அதை சேலஞ்ச் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இந்த தீர்ப்பு சிவில் கோர்ட் வழக்கை பாதிக்காது என்று சொல்லியிருக்கிறது. அதனால் இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த முழுமையான வெற்றியும் கிடையாது. எங்களுக்கு பாதகமானதும் கிடையாது. நாங்கள் சிவில் கோர்ட்டில் பார்த்துக்கொள்வோம். தீர்மானங்களை எதிர்த்து சேலஞ்ச் செய்வோம்.

சிவில் கோர்ட்டில் ஸ்டே வாங்கிவிடுவோம்
தீர்மானங்கள் செல்லும் என்று கோர்ட் சொல்லவில்லை. பொதுக்குழு மட்டுமே செல்லும் என்று கோர்ட் சொல்லியுள்ளது. எனவே அவர்களுக்கு முழுமையான வெற்றி இல்லை. பொதுச்செயலாளர் தேர்தலை இபிஎஸ் தரப்பால் நடத்த முடியாது. நாங்கள் சிவில் கோர்ட்டில் ஸ்டே வாங்கிவிடுவோம். கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். எங்கள் தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். யாரும் உற்சாகம் இழக்கவில்லை. தீர்ப்பு முழுமையாக வந்த பிறகு அதை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications