அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.. 4 பக்கமும் சிக்கலில் மாட்டிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி?
சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் கூட்டணிக்கு வருவார்கள் என்று நம்பியவர்களால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு சிக்கலை சமாளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடக்க உள்ள நிலையில், அதிமுகவுக்கு ஒவ்வொரு நாளும் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா இடையிலான சந்திப்பு நடந்த பின், அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இதன்பின் அமித்ஷா ஒருபுறம் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இன்னொரு புறம் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. திமுக ஆட்சியின் மீதான விமர்சனங்களை மக்களிடம் கொண்டு சென்றார். ஆனால் கரூர் விவகாரத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி, தவெக கூட்டணி அமையப் போகிறது என்று கொடுத்த சிக்னல் மிகப்பெரிய சிக்கலாக மாறி இருக்கிறது.
தவெக கொடியை பார்த்து, கொடி பறக்குது.. கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். ஆனால் விஜய் தவெகவின் சிறப்பு பொதுக்குழுவில், திமுக மற்றும் தவெக இடையில் மட்டுமே போட்டி என்று அறிவித்துவிட்டு சென்றுவிட்டார். கரூர் விவகாரத்தில் சட்டசபையில் ஆதரவு குரல் கொடுத்த எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை.
இதனால் அதிமுக கூட்டணிக்கு தவெக வராது என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் டெல்டா மாவட்டங்களில் டிடிவி தினகரன் குடைச்சல் கொடுக்க தொடங்கி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை தொடர்ச்சியாக பேசி, அவரின் இமேஜை டேமேஜ் செய்ய தொடங்கி இருக்கிறார். மறுபக்கம் ஒபிஎஸ் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய எதிர்ப்பலையை உருவாக்கி வருகிறார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கைகோர்த்து முக்குலத்தோர் சமூக வாக்குகளை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திருப்பி வருகின்றனர். மேற்கு மண்டலத்தில் செங்கோட்டையன் திடீரென எதிர்ப்புக் குரல் எழுப்ப, ஈரோடு மாவட்டத்திலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் பாமக கூட்டணி இருந்தால், அதிக தொகுதிகளில் வெல்லலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டிருந்தார்.
ஆனால் பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. அது வார்த்தை மோதலில் தொடங்கி கைகலப்பாக மாறி இருக்கிறது. அதேபோல் ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிரான அரசியலையும் செய்ய வேண்டிய தேவை உள்ளது. இத்தனை சிக்கலையும் எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிப்பார் என்பதே அதிமுகவினரின் குரலாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications