கோவையில் லஞ்சமழை..ஈரோடு கிழக்கில் பணமழை..பாஜக அண்ணாமலையின் புகார் மழை
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாகவும் கோவையில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை புகார் கூறியுள்ளார்.
கோவை: , தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் அதை முதல்வர் தடுக்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை முறைகள் அப்பட்டமாக மீறப்படுவதாகவும் அதை தடுக்க தமிழக தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் 25 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க 15 நாட்கள் கால அவகாசம் தருகிறோம். முதலமைச்சர் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறினால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஈரோடுக்கு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முகாமிட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணம் பட்டுவாடா தொடர்பாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
பணப்பட்டுவாடாவை தடுக்க 5 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் ஈரோடுக்கு வருகை தந்துள்ளனர். ஒவ்வொரு குழுவில் 80 பேர் வீதம் 400க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர். இதுதவிர தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் 160 பேரும் வந்துள்ளனர். இதில் துணை ராணுவத்தினர் போலீசாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழுக்கள், 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுகவும் பாஜகவும் மாறி மாறி தேர்தல் அதிகாரியிட்ம் புகார் அளித்து வருகின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் புகார் தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக அமைச்சர்கள் , திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தொடர்பான திமுக அமைச்சர் கே.என்.நேருவும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் உரையாடியது தொடர்பான ஆடியோவை கடந்த மாதம் 29ஆம் தேதி பாஜக வெளியிட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வாக்காளர்களுக்கு 2 கிலோ இறைச்சியை திமுகவினர் அளித்ததாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ரூ.1000 முதல் 5000 வரை பணபட்டுவாடா செய்யப்படுவதாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தொடர்ந்து புகார்கள் அளித்தும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிள்ளார்.
ஆளும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications