சுற்றி வளைக்கப்படும் சீமான்.. மீண்டும் ஈரோடு போலீசார் சம்மன்! "வெடிகுண்டு” மிரட்டல் வழக்கில் ஆக்ஷன்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மீண்டும் சம்மன் வழங்க ஈரோடு போலீசார் சென்னை வந்துள்ளனர். ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது வெடிகுண்டு வீசுவேன் என சீமான் பேசியது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி ஈரோடு அசோகபுரம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது, "உன் பெரியார் வைத்துள்ளது வெங்காயம். என் தலைவன் வைத்துள்ளது வெடிகுண்டு. பி கேர்ஃபுல்" என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும், மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.
அந்தப் புகார்களின் பேரில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், சீமான் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு நேரடியாக சென்று கருங்கல்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் வழங்கினர்.
ஆனால், சீமான் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்குவதற்காக ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சென்னை நீலாங்கரைக்கு விரைந்துள்ளனர். ஈரோடு கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளர் விஜயன் தலைமையிலான போலீசார் சற்று நேரத்தில் சீமான் வீட்டுக்கு வந்து சம்மன் வழங்க உள்ளனர்.
முன்னதாக, நடிகை விஜயலட்சுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சீமான் நெருக்கடியில் சிக்கி உள்ளார். வளசரவாக்கம் போலீசார் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அளித்திருந்தனர். ஆனால், நேற்று ஆஜராக அனுப்பப்பட்ட சம்மனுக்கு 4 வார அவகாசம் கேட்டு சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் போலீசில் மனு அளித்தனர்.
இதையடுத்து, இன்று ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் நேற்று மதியம் போலீசார் சம்மன் ஒட்டினர். சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டதை அடுத்து விசாரிக்கச் சென்ற போலீசாரை, வீட்டின் பாதுகாவலர் தாக்கியதை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் வழக்கறிஞர்கள் விளக்க கடிதம் தர உள்ளனர். இதற்கிடையே, ஈரோடு போலீசாரும் சம்மன் வழங்க சீமான் வீட்டுக்கு விரைந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications