சசிகலா சொன்னதை எல்லாரும் மறக்கலாம்.. ஆனால் நான் மறக்கலை.. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆவேசம்
சென்னை: அதிமுக விரைவில் ஒன்றிணையும் என சசிகலா கூறிய நிலையில், சசிகலா ஜெயிலில் இருக்கும் போது சொன்னதை எல்லாரும் மறக்கலாம்.. ஆனால் நான் மறக்கவில்லை என ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக தாக்கி பேசினார். மேலும் அதிமுக கொடியை தான் பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் இதற்காக ஜெயிலுக்கு போகவும் தயார் என்று புகழேந்தி ஆவேசமாக கூறினார். புகழேந்தி பேட்டியின் முழு விவரம் வருமாறு:-

நாங்கள் இரண்டு மூன்று கொடி வைத்திருக்கிறோம். இரட்டை இலை போட்ட கொடி ஒன்று இருக்கு. ரெஜிஸ்ட்ரேஷன் செய்யும் போது எங்கள் சரித்திர நாயகன் எம்ஜிஆர் கொடுத்த கொடி இருக்கு.. யூனியன் அண்ணா தொழிற்சங்க கொடி என ஒன்று இருக்கு. கொடியை கட்டிக்கொண்டு காரில் வருவேன் போவேன்.. என்னை எல்லாம் யாரும் தடை செய்யவே முடியாது. கொடியிலே தான் பிறந்தோம்.. கொடியிலே தான் வளர்ந்தோம்.. கொடியிலே தான் இறப்போம்..
அமைதியான தலைவர்: யார் சொன்னாலும் கேட்க மாட்டோம்.. இது புரட்சி தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கி தந்த கொடி.. அண்ணாவின் பெயரை பொறித்த கொடி.. இந்த வேலை எல்லாம் வேண்டாம். அவருடைய பெயரை போட்டாச்சு.. அவர் கோர்ட்டுக்கு மரியாதை கொடுக்கிறார்.. அமைதியான தலைவர்.. அம்மாவால் வழி வந்தவர்.. அம்மாவால் முதலமைச்சர் ஆனவர்... அவர் கோர்ட் ஆர்டரை மதித்து பணிந்து போகிறார். அது என்னை எல்லாம் கட்டுப்படுத்தாது.
இதுக்காக ஜெயிலுக்கு போகவும் நான் தயார். என்ன வேண்டும் என்றாலும் பண்ணிக்கொள்ளட்டும்.. எனக்கு கவலையே இல்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தான் அவர் இன்றும் தேர்தல் ஆணையத்தில் இருக்கிறார். எனவே அதிமுகவில், அந்த பேனரில் தான் பூத் கமிட்டி கூட்டம் நடக்கும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நீதிமன்றத்தை வணங்குகிறோம்.. என் பெயரை போட்டு அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று இருக்கிறதா..
எழுச்சி இருக்கும்: ஓ பன்னீர் செல்வத்தை டார்கட் செய்து தான் அவர்கள் அப்படி செய்திருக்கிறார்கள். எல்லையை மீறி போய்க்கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமியின் அராஜகம், அங்கே பைல் செய்த மனு எல்லாம் தவறான ஒன்று.. இதை நாங்கள் நிரூபித்து விடுவோம்.. நாங்கள் புறப்பட்டு விட்டோம். ஏனென்றால் ஒவ்வொரு இடத்திலும்.. ஒவ்வொரு மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் ஏற்பாட்டில் இரண்டு இரண்டு மாவட்டங்களாக வருவாய் மாவட்டத்திற்கு ஓ பன்னீர் செல்வமே உடன் வருகிறார்.
பூத் கமிட்டி அமைக்கிறோம். இத்தனை நாட்களாக வெளியில் வரவில்லை.. பொறுத்தது போதும்.. இனிமேல் எடப்பாடி பழனிசாமி பேரம் பேசி அதிமுகவை முழுவதுமாக ஒழித்துவிட முடிவு செய்துவிட்டார் என்ற நிலைப்பாடு உறுதியான பின்னர் தான் எங்கள் எழுச்சி உறுதியாகியுள்ளது. நிச்சயமாக எழுச்சி இருக்கும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. ஈரோடு இடைத்தேர்தல் வரை எடப்பாடி தோல்வியை தான் சந்தித்து உள்ளார்.
சசிகலா சொன்னதை மறக்கவில்லை: ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆகவே வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். அப்போது உண்மையான சக்தி எது என்பது தெரிந்துவிடும். வாங்க.. வாங்க என்று சொல்லியாச்சு.. கட்சி வீணாக போய்விடும் என்று சொன்னோம்.. நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்புக்கு பின்னர் கூட அண்ணன் வா என்று கூறினார். பொறுமையாக சொல்லி பார்த்தாச்சு.. அப்போதும் வரவில்லை.. கட்சியின் ஒருமைப்பாட்டில் ஒருபோதும் அக்கறை இல்லாதவர் தான் எடப்பாடி..
அதிமுக ஒன்றிணையும் என்று சசிகலா கூறுகிறார். சசிகலாவை நான் மதிக்கிறேன்.. சசிகலா ஜெயில் இருந்து ஒன்று கூறினார்கள்.. எடப்பாடி பழனிசாமி சரியில்லை என்று சசிகலா கூறியதை எல்லாரும் மறக்கலாம்.. ஆனால் நான் மறக்கவில்லை. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பதற்கு தான் ஓ பன்னீர் செல்வம் வருகிறார். பூத் கமிட்டி அமைப்பதற்கு தான் இந்த கூட்டம். ஓ பன்னீர் செல்வம் உரையாற்றுவார்.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications