தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது! சசிகலா ஒரு சுதந்திரப் பறவை! ஜெயக்குமார் விமர்சனம்!
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சசிகலா ஒரு சுதந்திரப் பறவை என்றும் அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் அதைப்பற்றி தங்களுக்கு கவலையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நிபந்தனை ஜாமினில் உள்ள ஜெயக்குமார், நீதிமன்ற உத்தரவுப் படி சென்னையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

அதிமுக அஞ்சாது
எதற்கும் அஞ்சாத இயக்கம் அதிமுக என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் பொய் வழக்குகள் பதிவதால் மட்டுமே ஆட்சியை விமர்சித்து பேசுவதை தடுத்துவிடலாம் என அவர் எண்ண வேண்டாம் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பூனை கண்களை மூடினால் உலகமே இருண்டுவிட்டது போல் நினைக்கும் என்ற பழமொழியை போல் தன்னை கைது செய்வதால் மட்டும் ஆட்சி மீதான விமர்சனங்களை நிறுத்த முடியாது எனத் தெரிவித்தார்.

துபாய் பயணம்
காகித ஓடை கடல் அலை போல என்ற பாடலை சுட்டிக்காட்டிய ஜெயக்குமார், முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் நாட்டுக்கு குடும்பச் சுற்றுலா சென்றதாகவும் அந்தப் பயணம் பிசுபிசுத்துவிட்டது எனவும் விமர்சித்தார். சர்வதேச எக்ஸ்போ முடிவடைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் தமிழக அரங்கை திறக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என வினவிய ஜெயக்குமார், தேர்தலுக்கு முன்னர் பெறப்பட்ட புகார் பெட்டிகளின் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் எனவும் வினவினார்.

தமிழக மக்கள்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் வழிப்பறிக் கொள்ளைகள் சென்னையில் அதிகரித்திருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார். மக்களுக்கு நல்லது செய்கிறாரோ இல்லையோ அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் கங்ககணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாக ஜெயக்குமார் புகார் தெரிவித்தார்.

சசிகலா விவகாரம்
சசிகலா ஒரு சுதந்திரப் பறவை என்றும் அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் அதைப்பற்றி தங்களுக்கு கவலையில்லை எனவும் தெரிவித்தார். இந்தியா ஒரு சுதந்திர நாடு என்பதால் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றும் சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications