பத்திரப்பதிவில் மீண்டும் அதிரடி.. இதுதான் ஸ்டாலின்.. விரைவில் வருது பெரிய சலுகை.. யாருக்கு தெரியுமா?
சென்னை: பத்திரப்பதிவு துறையானது, பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இப்போதும் ஒரு புதிய முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, பத்திரப்பதிவு துறை சார்பில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வகையில், "323 கோடி ரூபாயில், ஸ்டார் 3.0" சாப்ட்வேர் தயாரிக்கும் பணிக்கு, சில நாட்களுக்கு முன்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில், 1975 முதல் பதிவான பத்திரங்களை ஸ்கேன் செய்து, "ஸ்டார் 3.0" தொகுப்பில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.

பத்திரப்பதிவு: அதன்படி, மாவட்ட பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பத்திரங்களை தங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் தொகுப்புடன் ஒப்பிட்டு சார் பதிவாளர்கள் சரி பார்க்க வேண்டும் என்றும், ஏதாவது பத்திரங்கள் விடுபட்டு இருந்தால், அது குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்து, மறுபடியும் ஸ்கேன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் உண்மை தன்மையை உறுதி செய்ய, திருத்தங்களை தவிர்க்க, "நம்பிக்கை இணையம்" என்ற புதிய முத்திரை பதிக்கும் முறையும் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மகளிருக்கு பத்திரப்பதிவில் சலுகை வழங்குவதற்காக, தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறதாம்.. அதாவது, வீடு, மனை போன்ற சொத்துக்களை, மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்யும்போது, அதற்கான முத்திரை தீர்வை, பதிவு கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்க, தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெண்களுக்கு சலுகை: தமிழக முதல்வர் ஸ்டாலின், பெண்கள் பயன்பெறும் வகையிலான பல திட்டங்களை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார்... அந்தவகையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில், மகளிர் பெயரில் வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.. இந்த வரிசையில், சொத்து வாங்கும் மகளிருக்கு பத்திரப்பதிவில் சலுகை வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க தொடங்கியிருக்கிறது.
இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஏற்கனவே, தமிழகத்தில் சொத்து விற்பனைக்கான பத்திரப்பதிவு கட்டணம், முத்திரை தீர்வு கட்டணங்கள் அதிகமாக உள்ளது. அதனால், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ளதைபோலவே, மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கான தீர்வை, கட்டணங்களை குறைத்தால், பெண்களுக்கு உதவியாக இருக்கும் - மகளிருக்கும் முக்கியத்துவம் கிடைக்கும் - பத்திரப்பதிவும் அதிகரிக்கும்" என்றார்.
இந்நிலையில், மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு தீர்வை, கட்டணத்தில் சலுகை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய்ந்து வருவதாகவும், இதற்குரிய முடிவை விரைவில் அறிவிக்கும் என்றும் மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றதுமுதலே, பெண்களுக்கு பயனளிக்கும் திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.. இலவச பேருந்து முதல் 1000 ரூபாய் உரிமைத்தொகை வரை, இல்லத்தரசிகளின் நலனை கருத்தில் கொண்டே அறிவித்தும், செயல்படுத்தியும் வருகிறார். அந்த வரிசையில், பத்திரப்பதிவு துறையிலும் பெண்களுக்கு சலுகை வழங்கப்பட்டால், அது திமுக அரசின் இன்னொரு மைல்கல்லாக அமையும் என்றே நம்பப்படுகிறது.. பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications