"சிக்ஸர்".. அண்ணா வணக்கம்ண்ணா.. அது செருப்பா? நான் விரதம் ஆச்சே.. காங். பந்தை திருப்பி வீசிய அண்ணாமலை
தன்னுடைய போட்டோவுக்கு செருப்பு மாலை அணிவித்தவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அண்ணாமலை
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் போட்டோவுக்கு, செருப்பு மாலை போட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர்.. இந்த போட்டோ இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.. மற்றொருபுறம் ஏராளமான கமெண்ட்களையும் பெற்று தந்துள்ளது. அதில் அண்ணாமலையே ஒரு கமெண்ட் தெரிவித்துள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருகிறது.. இதற்காக திமுகவை டேமேஜ் செய்து கொண்டே, அக்கட்சி மீதான புகார்களையும் மக்களிடம் கொண்டு செல்ல முனைப்பு காட்டி வருகிறார் மாநில தலைவர் அண்ணாமலை.
ஆனால், தங்கள் மீது அண்ணாமலை முன்வைக்கும் விமர்சனங்கள் எல்லாம் தவறானவை, போலியானவை என்று திமுக தரப்பிலும் சரியான பதிலடிகள் முன்வைக்கப்பட்டு வந்தாலும், அண்ணாமலையின் புகார்கள் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

ஆட்டுக்குட்டி
அதற்கேற்றவாறு, திமுகவின் அடிமட்டத்தில் சிலர், அண்ணாமலையை ஆட்டுக்குட்டியுடன் தொடர்புபடுத்தி விமர்சிப்பதும் அதிகரித்து கொண்டே வருகிறது.. ஒருமுறை, மாநில தலைமை பொறுப்பை அண்ணாமலை ஏற்ற சமயம், செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.. அப்போது, தற்சார்பு விவசாயம், இயற்கை வேளாண்மை, ஆட்டுக்குட்டி வளர்ப்பு எல்லாம் இனி அவ்வளவுதானா? என்று ஒருமுறை செய்தியாளர்கள் இவரிடம் கேட்டனர்.. அதற்கு, "அதையும் பார்ப்பேன் இதையும் பார்ப்பேன்" என்று துணிந்து பதில் சொல்லியிருந்தார் அண்ணாமலை...

அறிவாலயம்
அதுமட்டுமல்ல, தனக்கு கட்சியினர் ஆட்டுக்குட்டியை பரிசளித்தபோது, ஆஸ்கர் விருது பெற்றதுபோல மகிழ்ந்தேன் என்றும் அண்ணாமலை அப்போது பூரித்து சொல்லியிருந்தார்.. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, ஆட்டுக்குட்டியை வைத்து அண்ணாமலையை திமுகவில் சிலர் சீண்ட போவதாக தகவல்கள் வந்தன.. இதற்கும் அண்ணாமலை ரெடியாகவே இருந்தாராம்..

ஆடு குட்டி
முக்கியமாக, அண்ணாமலை பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், சால்வை, மாலைக்கு பதிலாக ஆட்டுக்குட்டியை பரிசளிக்க பாஜகவினர் முடிவு செய்திருப்பதாகவும், இப்படி தனக்கு பரிசாக கிடைக்கும் ஆட்டுக் குட்டிகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க, அண்ணாமலை முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் அப்போது வலம்வந்தன.. அதாவது, தன்மீதான விமர்சனம் எதுவோ, அதை வைத்தே எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி தருவதுதான் அண்ணாமலையின் யுக்தியாகும்..

செருப்பு மாலை
இப்போதும் அப்படித்தான் ஒரு விமர்சனத்தை அண்ணாமலை கையாண்டுள்ளார்.. தமிழக காங்கிரஸ் பிரமுகர் நிலவன் என்பவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், தமிழக அண்ணாமலை படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து விமர்சித்து இருந்தார்.. இதற்கு கடுமையான கண்டனங்கள் நாலாபக்கமும் எழுந்தன.. கருத்தை, கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டுமே, இப்படி தரக்குறைவாக நடந்து கொள்ளக்கூடாது என்று கமெண்ட்கள் குவிந்தன..

அண்ணா அண்ணா
ஆனால், அண்ணாமலை இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பதிவிட்டுள்ளதில், "அண்ணா வணக்கம்.. செருப்பினால் மாலை அணிவித்து கவுரவம் தந்துள்ளீர்கள்... செருப்பு புற அசுத்தங்களில் இருந்து நம்மை பாதுகாப்பது. நான் தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் ஏற்றுள்ளேன். செருப்பு அணிவதில்லை. தாங்களும் தங்கள் அன்பான குடும்பமும் நலமுடன் வாழ சபரிமலை சாஸ்தாவை வேண்டுகிறேன்" என்று அதில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

பொய் பொய்
இதனிடையே, ஐயப்பகோயிலுக்கு அண்ணாமலை மாலை போட்டுள்ளதை வைத்தே, காயத்ரி ரகுராம் ஒரு கேள்விக்கு பதில் வேண்டும் என்று இன்று கேட்டுள்ளார்.. "என் மீது அண்ணாமலையால் வைக்கப்பட்ட தனிநபர் தாக்குதல் ஆகும். மாநில தலைவர் அண்ணாமலை சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளார். அவர் இந்த நேரத்தில் நிச்சயம் பொய் பேசமாட்டார். எனவே துபாய் ஹோட்டலில் 150 பேர் முன்பு என்னை பற்றி அவதூறாக நீங்கள் பேசியதை ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் என் மீதான குற்றச்சாட்டை மறுக்க வேண்டும்.. எனது விவகாரத்தில் அண்ணாமலை அமைதியாக மவுனம் காப்பதை என்னால் ஏற்க முடியாது. என்னிடம் ஆதாரங்கள் உள்ளன" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications