Exclusive கர்நாடகா தேர்தலுக்கு பிறகு அதிரடிக்கு தயாராகும் டெல்லி பாஜக! அண்ணாமலை மாற்றப்படுகிறாரா?
சென்னை: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக பாஜகவில் நிறைய மாற்றங்கள் வரலாம் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் பிரியன் அளித்த பேட்டியின் கேள்வி பதில் வடிவம் இதோ:

கேள்வி: அதிமுக - பாஜக இடையே இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் கூட்டணி அமைத்தால் எப்படி ஒத்து போவார்கள்?
பதில்: அண்ணாமலை அதிமுகவுடனான கூட்டணிய உடைப்பதில் குறியாக இருக்கிறாரா, இல்லை அதிமுகவை மிரட்டுவதில் குறியாக இருக்கிறாரா என்பதை பார்க்க வேண்டும். அதிமுகவை மிரட்டுவதை அவர் மேலிடத்தின் ஆசிர்வாதத்துடன் அவர் தொடர்கிறார் என்றே புரிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் இவர் தனியாக குழப்பத்தை உண்டாக்குகிறார் என்றால் இவருக்கான பிரச்சினையை உண்டாக்குகிறார் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். இந்த இரண்டில் எது என்பது தெளிவாக இல்லை. இன்னும் கொஞ்ச நாட்களில் தெரிந்து விடும்.
என்னுடைய கணிப்பு என்னவென்றால் பாஜக தலைமை மாநில தலைமையை பார்த்து நாம் அதிமுகவுடன்தான் கூட்டணியில் இருக்கிறோம். நீங்கள் அவர்களை சீண்டாதீர்கள். தொகுதி பங்கீட்டு விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என சொன்னால் உடனே அண்ணாமலை தனது பதவியை விட்டுவிட்டு தொண்டனாக செல்வேன் என அவர் சொன்னதை போல் செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. அதனால் அதிமுகவுடன் கூட்டணியில்தான் இருப்பார் என கருதுகிறேன்.

கேள்வி: அதிமுக, பாஜக கூட்டணியால் இருவருக்குமே பலனில்லையே
பதில்: அதாவது இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் தேர்தலுக்கு முன்பு இவர்கள் என்னதான் அடித்துக் கொண்டாலும் தேர்தலின் போது கூட்டணியில் இணைந்துவிட்டால் ஒன்றாக சேர்ந்து செயல்படலாம் என நினைக்கிறார்கள். அடிமட்ட தொண்டர்களுக்கு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதில் விருப்பமே கிடையாது. இதையெல்லாம் மீறிதான் மேல் மட்டத்தில் இருக்கும் 10, 15 தலைவர்கள் பாஜகவுடன் போக வேண்டும் என நினைக்கிறார்கள். அதிமுக நிர்வாகிகளின் வீக்னஸை பயன்படுத்தி அதிக இடங்களை பெற வேண்டும் என்பது அண்ணாமலையின் விருப்பமாக இருக்கிறது.
கேள்வி: அண்ணாமலையின அரசியலை எப்படி புரிந்து கொள்வது?
பதில்: அவருடைய அரசியலை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம்.

கேள்வி: அதிமுகவை விமர்சிப்பதுத திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டது எல்லாம் டெல்லி தலைமையின் சம்மத்துடன் அமைச்சர் அமித்ஷாவின் சம்மதத்துடன் அவர் வெலியிட்டது போல் தெரிகிறதே?
பதில்: அப்படியில்லை, பிரதமர் தமிழகம் வந்த போது கூட டெல்லியில் இருந்த அண்ணாமலையை அமித்ஷா சென்னைக்கு அனுப்பாமல் டெல்லியிலேயே இருங்கள் என சொல்லிவிட்டாரே! அண்ணாமலையும் அதையேதான் சொல்கிறார். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என தெரியவில்லை. அண்ணாமலை மீது பாஜக தலைமைக்கு கோபம் இருப்பதாக மூத்த நிர்வாகிகள் சொல்கிறார்கள். எல் முருகனுக்கு பாஜக தலைமை முக்கியத்துவம் கொடுப்பதே அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை.
தமிழ் புத்தாண்டுக்கு முன் தினம் இரவு டெல்லியில் ஒரு விழாவை மத்திய இணையமைச்சர் எல் முருகன் நடத்தினார். இந்த விழாவிற்கு பிரதமர் கலந்து கொண்டார். ஆனால் அண்ணாமலை கலந்து கொள்ளவே இல்லை. திமுக ஊழல் பட்டியலை வெளியிட அவர் உடனடியாக சென்னை திரும்பிவிட்டதாக சொல்லப்பட்டாலும் முன்கூட்டியே வர வேண்டிய அவசியம் இல்லை. நள்ளிரவு விமானங்களில் கூட அவர் வந்திருக்கலாம்.
எல்.முருகன் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அண்ணாமலை தெரியாத ஒரு வியூகத்தை பாஜக தலைமை எல்.முருகனை வைத்து செயல்படுத்துவதாக தெரிகிறது. அண்ணாமலை மீது நிறைய புகார்கள் இருக்கிறது, அவரை எப்போது வேண்டுமானாலும் பதவியிலிருந்து நீக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. அண்ணாமலையை அனுப்பிவிட்டு எல்.முருகனை வைத்தே தமிழக பாஜகவை வழிநடத்தலாம் என்ற விஷயமும் பாஜக தலைமைக்கு இருக்கிறது. கர்நாடகா தேர்தல் முடிந்தவுடன் பாஜக தலைமை முடிவு எடுக்கும் என கருதுகிறேன்.
கேள்வி: திமுக சொத்து பட்டியலை வெளியிட்டதே தேவையில்லாத வேலை என பாஜக மூத்த தலைவர்கள் கருதியதாக தகவல்கள் வருகின்றனவே? குறிப்பாக அதிமுக- பாஜக கூட்டணி சர்ச்சையை மூத்த தலைவர்கள் விரும்பவில்லை என்கிறார்கள்.
பதில்: திமுகவில் இருக்கும் ஒருவர் கல்லூரியோ பள்ளியோ நடத்தி வந்தால் அதை திமுக கணக்கில் சேர்த்தால் எப்படி சரியாக வரும்? 200 கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தை மெட்ரோ நிர்வாகமே நேரடியாக மறுத்துவிட்டது. இதெல்லாம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் கிடைக்கும் விஷயங்கள்தான். ஊழல் செய்துதான் திமுகவினர் சொத்து சேர்த்தார்கள் என அண்ணாமலை சொல்லவே இல்லை. அதற்கான ஆதாரங்களையும் காட்டவே இல்லையே. அண்ணாமலை சொன்ன குற்றச்சாட்டுகள் திமுகவை விட அதிமுகவை மிகவும் அச்சப்படுத்திவிட்டது.
கேள்வி: அதிமுகவுக்கு முதிர்ச்சி இல்லை என பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பதை பார்த்தால் இரு கட்சிகளும் வரும் தேர்தலில் தனித்தனியே போட்டியிடுவது போன்று தெரிகிறதே?
பதில்: ஊழலை ஒழிக்க அண்ணாமலை மட்டும்தான் இருப்பதை போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். இதே போல்தான் அரவிந்த் கெஜரிவால் காண்பித்தார். எனவே அண்ணாமலையை தமிழகத்தின் அரவிந்த் கெஜரிவால் என சொல்லலாம். அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் போது அதிமுகவின் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால், கூட்டணிக்குள் பெரிய பிரச்சினை உருவாகும். இது போல் ஊழலை வைத்து அச்சுறுத்துவதன் மூலம் அதிமுகவிடம் இருந்து நிறைய இடங்களை பெறலாம் என அண்ணாமலை கருதுகிறார். பாஜக தலைமையின் சம்மதத்துடன் இவர் பேசுகிறாரா இல்லை பாஜக தலைமை நாளை நம்மை வெளியே அனுப்பினாலு் ஊழலுக்கு எதிராக போரிட்டோம் என்ற நல்ல பெயருடன் அவர் வெளியே போனோம் என்பதற்காக இந்த விஷயத்தை அவர் கையில் எடுத்தாரா என தெரியவில்லை.
கேள்வி: ரபேல் வாட்ச் சீரியல் எண் 149, 147 என மாற்றி சொன்னது, வாட்ச் அழுக்காக இருந்ததால் மாற்றி சொல்லியதாக அண்ணாமலை சொல்கிறாரே.
பதில்: சொல்லும் போது மாற்றி சொல்லலாம், ஆனால் எழுதும்போது எப்படி மாற்றி எழுத முடியும். அண்ணாமலைக்கு நண்பர்கள் உதவுகிறார்கள் என்றால் சும்மா செய்ய மாட்டார்கள். மத்திய அரசில் அண்ணாமலையால் அவர்களுக்கு ஏதேனும் காரியம் நடக்க வாய்ப்பிருக்கிறது. தன் மனைவி தன்னை விட 7 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார் என அண்ணாமலையே சொல்கிறார், அவருடைய செலவுக்கு மனைவி காசு கொடுக்காமல் நண்பர்கள் ஏன் கொடுக்கிறார்கள், இவர் சொல்வது முன்னுக்கு பின் முரணாக இருக்கிறதே. 2 லட்சத்திற்கு மேல் பணமாக கொடுக்கக் கூடாது என்பதால் அவர் வாட்ச்சுக்கு 3 லட்சத்தை பணமாக கொடுத்ததாக சொல்வதே தவறு.
கேள்வி: அண்ணாமலை பேசுவதற்கு பாஜக நிர்வாகிகள் யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே
பதில்: தமிழகத்தில் இருக்கும் எல் முருகன், வானதி, நயினார் நாகேந்திரன், பொன்னார் என யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதை பார்த்தால் அவர்களுக்கே அண்ணாமலை சொல்வதில் நம்பிக்கை இல்லை போல! எனவே ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக மீது வைத்ததன் மூலம் அண்ணாமலை எதிர்பார்த்த பொலிட்டிக்கல் மைலேஜ் கிடைக்கவில்லை. அண்ணாமலை சொல்லும் விஷயங்கள் கேள்விக்குறியாகிவிட்டது. அண்ணாமலை ஒரு கேள்விக்குறி! இவ்வாறு மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications