அவங்க துணையோடு ‘கலகம்’ மூட்டுறாராம்.. சாதி + மதம்.. திருமாவளவனை அட்டாக் செய்த பாஜக நாராயணன்!
ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக கழற்றிவிடுகிறதா என்ற கேள்விக்கு நாராயணன் திருப்பதி பதில் அளித்துள்ளார்.
சென்னை : "சட்டம் ஒழுங்கைச் சீர்கெடுப்பது, சாதி ரீதியான பதட்டத்தை உருவாக்குவது, மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பது என பல பிரச்சனைகளை தமிழ்நாட்டில் திமுகவின் துணையோடு திருமாவளவன் செய்து வருகிறார். இதுவரை மாற்று மதம் குறித்தோ, ஏதாவது சாதி குறித்தோ நாங்கள் பேசி இருக்கிறோமா?" என நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசியது வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக போலீஸ் டிஜிபி-யை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்தும், அதிமுக - ஓபிஎஸ் - ஈபிஸ் பிரச்சனை குறித்தும் நம்முடன் பேசியுள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.

வெட்கக்கேடு
கேள்வி : விசிக தலைவர் தொல்.திருமாவளவன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக புகார் கூறியிருக்கிறாரே..?
நாராயணன் திருப்பதி : அண்ணாமலை என்ன பேசியிருக்கிறார் என்று கூட அறிந்துகொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் திருமாவளவன் புகார் அளித்திருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. அண்ணாமலை பேசியதை வெட்டி ஒட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவன் பதிவிட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம். ராணுவ வீரர்கள் எல்லையில் துப்பாக்கி எடுத்து சுட்டு பெரும் தியாகத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த நாட்டின் பிரதமர் வழிகாட்டுதலில் செயல்படுகிறார். நீங்கள் அங்கே போரிட்டு எதிரிகளை வீழ்த்துங்கள். தமிழ்நாட்டில் நாங்கள் உங்கள் குடும்பங்களைப் பார்த்துக் கொள்கிறோம் என்று அண்ணாமலை பேசியதை வெட்டி ஒட்டி இதுபோன்று மலிவான அரசியலில் திருமாவளவன் ஈடுபட்டிருக்கிறார். இதுகுறித்து நாங்கள் முழு வீடியோவையும் வெளியிட்டும் அவர் புகார் அளித்திருப்பது வேடிக்கையாகவும் வருத்தத்திற்குரியதாகவும் இருக்கிறது.

வன்முறையின் மறுபெயர்
கேள்வி : பாஜக, வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் வன்முறையைத் தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய நினைப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியிருக்கிறாரே.. இதற்கு உங்கள் பதில் என்ன?
நாராயணன் திருப்பதி : வன்முறையின் மறுபெயர் விசிக. தொடர்ந்து வன்முறையை, சாதி ரீதியான பல்வேறு பிரச்சனைகளை, உதாரணத்திற்கு சரக்கு இருக்கு.. மிடுக்கு இருக்கு என்றெல்லாம் பேசி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக திருமாவளவன் பேசியது உலகறிந்த உண்மை. அதேபோல மத ரீதியாக, பெரும்பான்மை மக்கள் வணங்கும் இந்து கடவுள்களை இழிவாகப் பேசி, இந்துக் கடவுள்களின் சிலைகள் அசிங்கமாக இருக்கும் என்று இந்துக்களின் நம்பிக்கைக்கு மாறாக திருமா பேசி வருவதும் உலகறிந்த உண்மை. சட்டம் ஒழுங்கைச் சீர்கெடுப்பது, சாதி ரீதியான பதட்டத்தை உருவாக்குவது, மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பது என்பது போன்ற பல பிரச்சனைகளை தமிழ்நாட்டில் திமுகவின் துணையோடு திருமாவளவன் செய்து வருகிறார்.
இதுவரை பாஜக எங்கேயாவது மாற்று மதம் குறித்தோ, ஏதாவது சாதி குறித்தோ நாங்கள் பேசி இருக்கிறோமா என்றால் கிடையாது. ஆனால், சாதி இல்லை இன்று சொல்லிக்கொண்டு, சாதிக்குள்ளேயே கலகம் மூட்டிக்கொண்டு இருப்பது இங்கே இருக்கும் திராவிட மாடல்கள் தான்.

யாருக்கு வெற்றி
கேள்வி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறீர்கள்?
நாராயணன் திருப்பதி : மார்ச் 2ஆம் தேதி முடிவு வரப்போகிறது. ஜனநாயக முறைப்படி இந்த தேர்தல் நடக்கவில்லை. அதிகார துஷ்பிரயோகம், மிக மோசமான பண விநியோகம், ஜனநாயகம் போய் பணநாயகமாகச் செயல்பட்டது, திருமங்கலம் ஃபார்முலா போய் இப்போது ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்ற புதிய ஃபார்முலாவை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த இடைத்தேர்தல் நாளை கறுப்பு நாளாகத்தான் நான் பார்க்கிறேன்.

பாஜகவுக்கு சம்பந்தம் இல்லை
கேள்வி : அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான இந்த தீர்ப்பை தொடர்ந்து அவருக்கு விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாஜக தலைவர்கள் வாழ்த்து சொல்லியிருக்கிறார்களா?
நாராயணன் திருப்பதி : இது அவர்களின் உட்கட்சி விவகாரம். இதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே நாம் அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. திருமாவளவன் வாழ்த்துச் சொல்லிவிட்டதற்காகவே நாங்களும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஓபிஎஸ்ஸை கழற்றிவிடுகிறதா?
கேள்வி : ஓபிஎஸ், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார் என்பதுதான் ஈபிஎஸ் தரப்பின் நிலைப்பாடாக இருக்கிறது. இப்படியான சூழலில் பாஜக ஓபிஎஸ்ஸை ஆதரிக்குமா அல்லது எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டை ஆதரிக்குமா?
நாராயணன் திருப்பதி : நாங்கள் என்றைக்குமே அஇஅதிமுக என்ற கட்சியுடன் தான் கூட்டணி வைத்திருக்கிறோம். சட்டப்படி அதிமுகவின் உறுப்பினர்களாக, தலைவர்களாக யார் இருக்கிறார்களோ அவர்களுடன் தான் பாஜக கூட்டணி தொடரும்.












Click it and Unblock the Notifications