ஆளுநர் பேட்டியில் "இதுஒன்றுதான்" உண்மை.. ஆக்ஷனில் தவறிவிட்ட தமிழக அரசு.. கோடிட்டு காட்டிய புள்ளி
சென்னை: தமிழகம் - பாகிஸ்தான் இடையே போதை பொருள், ஆயுதங்களை கடத்த திட்டமிடல் இருப்பதாக ஆளுநர் குற்றம்சாட்டியுள்ள நிலையில் இதை விளக்க வேண்டிய பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் உண்டு என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்பு சட்டத்தின்படி மிக உயர்ந்த இடத்தில் நடுநிலையோடு செயல்பட வேண்டிய ஒரு சுயகட்டுப்பாட்டை தனக்குத்தானே விதித்து கொண்டு ஒரு கட்டத்திற்குள் இருந்து கொண்டு இயங்க வேண்டியவரே ஆளுநர். அந்த வட்டத்தை தாண்டி முழுக்க முழுக்க அரசியல்வாதியாகவே அவர் அளித்த பேட்டியாகத்தான் ஆர்.என்.ரவியின் பேட்டியை பார்க்கிறேன்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக அவர்களுக்கு போட்டியாக அரசியல் செய்ய வேண்டும் என நினைப்பதைதான் தவறு என்கிறோம். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தவறானது, அவர் சொன்ன சில விதிமுறைகளும் தவறானது என ஆளுநர் தெரிவித்துள்ளார். 2000 ஆம் ஆண்டே திருத்தப்பட்ட ஒரு விதி அவருடைய கவனத்திற்கு வராததால் நான் விதியை மீறியதாக அமைச்சர் சொல்கிறார் என ஆளுநர் கூறியுள்ளார்.
விதி திருத்தப்பட்டதா என்பதை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்தான் விளக்க வேண்டும். ஒருவேளை அந்த விதி திருத்தப்பட்டு பிடிஆரின் கவனத்திற்கு செல்லாமல் இருந்தால் அவர் அதை ஒப்புக் கொள்ள வேண்டும். அது போல் தீட்சிதர்கள் வீட்டு குழந்தை திருமணங்கள் விவகாரத்திலும் அரசு என்ன நடந்தது என்பதை விளக்க வேண்டும். அது போல் தான் போடப்பட்ட வழக்கிற்கு எப்ஐஆர் கிடைக்கவில்லை என ஆளுநர் கூறும் குற்றச்சாட்டு மிகவும் சீரியஸானது.

அவர் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளரை அழைத்து இந்த விவகாரத்தை பேசியிருக்கலாம். சம்பவம் நடந்த ஒரு வாரம், 10 நாட்களில் இதை செய்யாமல் இத்தனை மாதமாக அமைதியாக இருந்து விட்டு ஒரு பத்திரிகை பேட்டி வாயிலாக காவல் துறையை குற்றம்சாட்டுகிறார். அது போல் இந்த எப்ஐஆர் விவகாரத்திலும் காவல் துறை விளக்க வேண்டும். பொதுவாகவே ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை விளக்க குறிப்பேடுதான். இந்த விதிமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது,. அந்த சட்டத்தை ஆளுநர் நினைத்தால் திருத்தலாமே!
தமிழகத்தில் பிஎப்ஐ அமைப்பை தடை செய்யப்பட்ட பிறகு நிறைய குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் தமிழகம் சொர்க்கபுரியாக இருக்கிறது என என்னால் எப்படி சொல்ல முடியும் என ஆளுநர் கேட்கிறார். அவர் கேட்பது சரியானது. இத்தனை சம்பவங்கள் நடந்த நிலையில் தமிழக அரசு எந்தவிதமான கடும் நடவடிக்கையையும் எடுக்கவில்லை. குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க திமுக அரசு செய்ய தவறியிருக்கிறது. ஆயினும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் கலவரப்பூமியாக இல்லை, அமைதிப்பூங்காவாகத்தான் இருக்கிறது.

தமிழகம்- பாகிஸ்தான் இடையே போதை பொருள், ஆயுத கடத்தலை செய்ய திட்டமிடல் இருப்பதாக ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார். இது உண்மையானதுதானா என்பதை தமிழக அரசுடன் மத்திய உள்துறையும் விளக்க வேண்டும். அது போல் மாநில உள்துறை அமைச்சராக உள்ள ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். இந்த சம்பவத்தை மத்திய புலனாய்வு பிரிவுகள் ஆளுநருக்கு கூறியிருந்தால் அதுகுறித்து ஆளுநர் ஏன் தமிழக உள்துறையுடன் பேசவில்லை, எந்த நடவடிக்கையும் எடுத்தாக சொல்லவில்லை.
ராஜ்பவனை மக்கள் பவன் என மாற்ற போவதாக கூறியுள்ளார். இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். இது போல் பெயர் மாற்றுவது எல்லாம் ஆளுநரின் பணியல்ல. தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையின் போது தேசிய கீதத்தை நான் முதலில் போட சொன்னேன் அவர்கள் போடவில்லை, அதனால் நான் வெளியேறினேன் என்கிறார். தமிழகத்தில் அப்படி ஒரு மரபே கிடையாது. ஆளுநர் எந்த மாநிலத்தில் இருக்கிறாரோ அந்த மாநிலத்தின் மரபை பின்பற்ற வேண்டும்.
அதிமுக அரசு கொண்டு வந்த ஆன்லைன் ரம்மி தடை மசோதாவில் சில திருத்தங்களை செய்து மேம்பட்ட சட்ட மசோதாவை திமுக அரசு கொண்டு வர வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் அதை திமுக அரசு 7 மாதங்களாக கிடப்பில் போட்டது தவறு. அதிமுக பிரச்சினையில் இன்னொரு கட்சி நுழைய முடியாது. இந்த விவகாரத்தில் ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும்தான் பேசிக் கொள்ள வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளதிலிருந்து ஓபிஎஸ்ஸுக்கு ஒரு இடம் அங்கு இருக்கிறது என அமித்ஷா நினைக்கிறார். ஓபிஎஸ்ஸை டெல்லி தலைமை இன்னும் முழுமையாக கைவிடவில்லை என்பதையே அமித்ஷாவின் பேட்டி காட்டுவதாக புரிந்து கொள்ளலாம். இவ்வாறு பத்திரிகையாளர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications