Exclusive: கோயிலில் சாதாரணமாக பாடுவோருக்கும் ஓதுவாருக்கும் என்ன வித்தியாசம்?.. விளக்கிய சுஹாஞ்சனா
சென்னை: கோயிலில் சாதாரணமாக மக்கள் பாடுவதற்கும் ஓதுவார் பாடுவதற்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து விளக்கியுள்ளார் சுஹாஞ்சனா. தமிழகம் முழுவதும் பேசப்படும் இவர் யார்?
Recommended Video
தமிழகத்தில் முதல் பெண் ஓதுவாராக சுஹாஞ்சனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியின் கனவை நனவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
தமிழகத்தில் முதல் பெண் ஓதுவாராக, சென்னை தாம்பரம் அருகேவுள்ள சேலையூரில் வசிக்கும் சுஹாஞ்சனா என்ற 28 வயது பெண் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 14-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பணி நியமன ஆணையை பெற்று கொண்டார் சுஹாஞ்சனா.

மாடம்பாக்கம்
இவர் தாம்பரம் மாடம்பாக்கத்திலுள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் தனது பணியை தொடங்கினார். இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு சுஹாஞ்சனா பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்த சுஹாஞ்சனாவுக்கு சிறுவயது முதலே நாள்தோறும் கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். இறைவன் முன் பாட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

இசை பள்ளி
பெற்றோர் அனுமதியுடன் கரூர் மாவட்டம் அரசு இசை பள்ளியில் குமாரநாத சுவாமி ஓதுவாரிடம் தேவாரம், திருவாசகம், திருப்பதிகம் உள்ளிட்டவற்றை 3 ஆண்டுகள் பயின்றேன். கரூரில் ஒரு தனியார் பள்ளியில் இசை ஆசிரியையாகவும் பணியாற்றியுள்ளேன். திருமணமாகி சென்னை தாம்பரம் அருகேவுள்ள சேலையூரில் வசித்து வருகிறேன்.

இறைவன் முன் பாடல்கள்
சிறுவயது முதலே கடவுள் பக்தி, இறைவன் முன் பாடல்கள் பாடுவதில் ஆர்வம் காரணமாக, ஓதுவார் பணிக்கான விளம்பரத்தை கண்டு, மகிழ்ச்சியுடன் விண்ணப்பம் செய்து, நேர்முக தேர்வில் வெற்றி பெற்றேன். தற்போது முதல் பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பூஜை நேரம்
கோயில்களில் பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் யார் வேண்டுமானாலும் பாடலாம். பூஜையின் போது ஓதுவார்கள் மட்டுமே பாடுவார்கள். அப்படி நிறைய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யும்போது பாடி கொண்டிருந்தேன். இப்போது பூஜை நேரத்திலும் நான் பாட முடியும். இந்த வாய்ப்பை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கோயில் பணி
பெண்களின் மற்ற பணிகளை போல் இதுவும் ஒன்று என்றாலும், கோயில் பணி என்பதால் ஒருசில விதிமுறைகள் உள்ளன. அதன்படி நடந்து கொள்ள வேண்டும். பக்தியையும், தேவாரம், திருவாசகம், திருப்பதிகம் உள்ளிட்ட தமிழ் பக்தி இலக்கியங்களின் சிறப்பையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும்.

விருப்பம் இதுதான்
அந்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். கோயில்களில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் பணிகள் இருந்தாலும் எனக்கு இசை வடிவிலான பக்தியிலேயே ஆர்வம் அதிகம். அதனால் அர்ச்சகர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு விண்ணப்பிக்கவில்லை. பெண் ஓதுவாராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மக்கள் அனைவரும் பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.
கணவரும் குடும்பத்தாரும் ஊக்கம்
பிற பணிகளில் உள்ள மற்ற பெண்களை போன்றே தானும் ஒரு குடும்ப தலைவியாகவும், பணியிலும் சரியாக செயல்படுவேன். எனது கணவரும் எனக்கு இருக்கும் இசை ஆர்வத்தை பார்த்து எனக்கு நிறைய ஒத்துழைப்பையும் ஊக்கத்தையும் கொடுத்தார். எனது மாமனார், மாமியாரும் எனக்கு ஊக்கம் அளித்தனர். எனது மாமியார் வீட்டு வேலைகளை முழுவதுமாக செய்து எனக்கு குறைந்த அளவிலான வேலைகளையே கொடுத்தார். நான் முன்னேற பாடுபட்ட அவருக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன். பக்தியும், தமிழ் மொழியில் உள்ள பக்தி இலக்கியங்களும் ஓதுவார் பணியை தான் தேர்ந்தெடுக்க காரணம். என்னை போல் விருப்பம் உள்ள மற்ற பெண்களும் ஓதுவார் பணிக்கு வர வேண்டும். எனக்கு கிடைத்த வாய்ப்பு மற்ற பெண்களுக்கும் தூண்டுகோலாக இருக்கும் என சுஹாஞ்சனா குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications