நகர்ப்புற வாக்காளர்களை அப்படியே அள்ளிய தவெக.. திமுகவுக்கு பெரிய அடி? Exit Poll சொல்வது என்ன?
சென்னை: ஆக்சிஸ் - மை இந்தியா வெளியிட்ட எக்சிட் போல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் புயலையே கிளப்பி உள்ளது எனலாம். திமுகவுக்கு நிகரான வாக்கு சதவீதத்தை தவெக பெறக்கூடும் என இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நகப்புறங்களில் திமுகவை முந்துகிறது தவெக.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு வெளியான எக்சிட் போலில், மாநிலம் முழுவதும் வாக்கு சதவீதத்தில் கடும் போட்டி நிலவுவதாக தெரியவந்துள்ளது. Axis My India நிறுவனம் வெளியிட்ட இந்த கணிப்பில், DMK கூட்டணி மற்றும் TVK இரண்டும் தலா 35% வாக்கு பங்குடன் முன்னிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், AIADMK கூட்டணி 23% வாக்குகளையும், NTK 3% மற்றும் பிற கட்சிகள் 4% வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

பகுதி வாரியான கணக்கெடுப்பில், கிராமப்புறங்களில் திமுக கூட்டணி 35% வாக்குகளை பெற்றிருந்தாலும், முந்தைய தேர்தலை விட 14% சரிவு காணப்படுகிறது. அதாவது, முந்தைய தேர்தலில் கிராமப்புற வாக்குகளில் 49% பெற்றிருந்தது திமுக. நகர்ப்புறங்களில் திமுக கூட்டணிக்கு 35% வாக்குகள் கிடைத்தாலும், அங்கு 12% குறைந்துள்ளது. கடந்த தேர்தலில் நகர்ப்புறங்களில் கிராமப்புறங்களில் 47% வாக்குகளை பெற்றிருந்தது திமுக.
புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிடத்தக்க உயர்வை பதிவு செய்துள்ளது. கிராமப்புறங்களில் 33% மற்றும் நகர்ப்புறங்களில் 38% வாக்குகளை தவெக பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அந்தக் கட்சியின் வேகமான எழுச்சியைக் காட்டுகிறது.
அதிமுக கூட்டணி கிராமப்புறங்களில் 25% வாக்குகளைப் பெறும் என ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கடந்த முறை கிராமப்புற வாக்குகளில் 44 % வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது அதில் 19% சரிவைக் கண்டுள்ளது.
நகர்ப்புறங்களில் 21% வாக்குகளை மட்டுமே அதிமுக பெறுகிறது என ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்களின் 40% வாக்குகளை அதிமுக பெற்றிருந்த நிலையில் இந்த முறை கணிசமான சரிவை சந்திக்கிறது. இப்போது 21% நகர்ப்புற வாக்குகளை மட்டுமே அதிமுக பெறுகிறது.
நாம் தமிழர் கட்சிக்கும் சிறிய அளவில் வாக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாதக கிராமப்புறங்களில் கடந்த முறை 6% வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் அது 3% ஆக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் கடந்த முறை 8% வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் அது 2% ஆக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆக, சகட்டுமேனிக்கு அனைத்து கட்சிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது தவெக என்கிறது ஆக்சிஸ் மை இந்தியா எக்சிட் போல் கணிப்புகள். தவெக, கிராமப்புற வாக்குகளில் 33%, நகப்புற வாக்குகளில் 38% சதவீதம் பெறும் என எக்சிட் போலில் கணிக்கப்பட்டுள்ளது.
எக்சிட் போல் கணிப்புகள், தமிழ்நாட்டில் இந்த முறை தேர்தல் முடிவுகள் மிகுந்த போட்டியுடனும், கணிக்க முடியாத திருப்பங்களுடனும் அமையக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. இறுதி முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாகும் நிலையில், அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications