சிறப்பான 12 திட்டங்கள்… வெள்ளத்தில் சென்னை தப்பிக்க சில வழிகள்!
சென்னை: வெள்ள பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டுவிட்டது சென்னை. மக்கள் அனைவரும் தனது சகஜமான பணிகளில் மூழ்கி விட்டன. இந்த டிசம்பர் 5 என்பது அவர்களின் நினைவில் ஒரு கருப்பு தினமாக எதிர்காலத்தில் இருக்குமா என்பதுகூட சந்தேகம்தான்.
ஏனெனில் சென்னை மக்கள் இனி, மழை வெள்ளத்தோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். முதலில் கொரோனா உடன் குடும்பம் நடத்தச் சொன்னார்கள். இப்போது வெள்ளத்துடன் நீச்சல் பழகச் சொல்கிறார்கள். சினிமா பாணியில் சொன்னால் இனிமேல் எல்லாம் அப்படித் தான்.

இயற்கை சீற்றத்தின் கொடூர தாக்குதல் வரும் காலங்களில் இதைவிடக் கொடூரமாக இருக்கும் என்பது காலநிலை மாற்றத்தில் கரைகண்டவர்களின் கணிப்பு.
ஆக, இதிலிருந்து விமோசனம் பெற முடியாதா? என்ற கேள்விக்கு வல்லுநர்கள் சிலர் பல மாற்றங்களை முன்வைக்கிறார்கள். அது என்ன?
சென்னையைச் சுற்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங் கள் உள்ளன. சென்னைக்குள் உள்ள ஆறுகள் என்றால், கூவம், கொசஸ்தலை ஆறு, அடையாறு பக்கிங்காம் கால்வாய் இப்படி சிலதை சொல்லலாம்.

ஆனால், இவை 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த கொள்ளளவில் இல்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகவே உள்ளது. மழையில் பெரும் நீர்ப் பெருக்கு ஏற்படும் போது இந்த நீர்வழிப் பாதைகளின் அளவு போதுமானதாக இல்லை. அதற்கு மிகமிக முக்கிய காரணமாகப் பலரும் சொல்லிச் சொல்லி ஓய்ந்தது என்னவென்றால், ஆக்கிரமிப்பு.
அதை உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் எம்.ஏ.டி.எஸ், அதாவது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடாசலம். கூடவே 3,600 சிறிய நீர்நிலைகளின் கொள்ளளவைத் தூர்வாரி சீர்படுத்த வேண்டும் என்பது இவரது முதற்கட்ட அறிவுறுத்தலாக உள்ளது.
அடுத்ததாக ஏரிகள் மற்றும் குளங்கள், குட்டைகளுடன் சரியான இணைப்பை உருவாக்க வேண்டும். அதனிடையே உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றவேண்டும் என்கிறார்.
பள்ளிக்கரணை சதுப்புநிலமானது 32ஏரிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவை நிறையும் போது இறுதியாக மழைநீர் வங்காள விரிகுடாவில் சென்று கலக்கிறது. அந்த ஏரிகளின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதுவே மிக முக்கி பிரச்சினை என்பது இவரது கருத்தாக உள்ளது.

பள்ளிக்கரணை சதுப்புநில ஆக்கிரமிப்பு என்ற பெரிய பிரச்சினையோடு உள்ளாட்சி நிர்வாகம் கூடவே மீதமுள்ள நிலத்தில் திடக்கழிவு மற்றும் திரவக் கழிவுகளைக் கொட்டி சீரழித்துவிட்டனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு 5,500 ஏக்கரில் பள்ளிக்கரணை சதுப்புவெளியில் இப்போது 10% அதிகமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவலைச் சொல்கிறார் வெங்கடாசலம்.
"நீர்நிலைகள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன. முன்பு ஈர நிலங்களின் மொத்த பரப்பளவு எவ்வளவு? அவற்றின் தற்போதைய அளவு என்ன? ஆகியவற்றை நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அவை மறுபடியும் மீட்கப்பட வேண்டும்" என்கிறார் அவர்

சென்னை இனி வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க வல்லுநர்கள் தரும் பரிந்துரைகள் என்ன தெரியுமா?
1, நீர்நிலைகளிலிருந்து குறைந்தது 80மீட்டர் தூரத்திற்குக் கட்டுமானங்கள் இருக்கக் கூடாது. அதற்கான சட்டவிதிமுறைகள் பாரபட்சம் பார்க்காமல் கடைப்பிடிக்க வேண்டும்.
2, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் கட்டிடச் சட்டவிதி 7படி நீர் வழிப்பாதைகளின் கரையோரங்களில் 15 மீட்டர் இடைவெளியைப் பராமரிக்க வேண்டும்.
3, ஆறுகள் மற்றும் ஆற்றுப் பொறம்போக்கு, ஏரிகள் மற்றும் ஏரி பொறம்போக்கு, கால்வாய்கள் என முறைப்படுத்தப்பட வேண்டும். காணாமல் போனவற்றை மீட்க உடனடியாக உத்தரவு இடவேண்டும்.
4, பள்ளிக்கரணை சதுப்புநிலமானது 1975ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 5500 ஹெக்டேரில் இருந்துள்ளது. அது 90% சுருங்கி இன்றைக்கு வெறும் 600 ஹெக்டேராக உள்ளது. இவை போர்க்கால அடிப்படையில் மீட்கப்பட வேண்டும்.
4) நீர்நிலைகளை மாசுபடுத்தும் பொருள்களைப் பொதுவெளியில் கொட்டுபவர்கள் மீது தனியே கடுமையான வரிகளை விதிக்கவேண்டும். திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.

5) செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைநீரைச் சேமிக்க புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
6) சென்னையில் ஏற்பட்டுள்ள மக்கள் பெருக்கத்தைக் குறைக்க 2 துணை நகரங்களை உருவாக்க வேண்டும்.
7) அந்தத் துணை நகரங்கள் நகரங்களைச் சென்னையுடன் இணைப்பதற்கான ரயில் பாதைகளை மேம்படுத்த வேண்டும்.

8) இனிவரும் காலங்களில் சென்னை மாநகரத்தைத் தென்மேற்கு நோக்கி மட்டுமே விரிவடைய அனுமதிக்க வேண்டும்.
9) வெள்ளம் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து அங்குள்ள மக்களை வேறு இடத்திற்கு முன்கூட்டியே மாற்றவேண்டும். வீட்டுப் பொருட்களுக்குக் காப்பீடுகளை உறுதி செய்யவேண்டும்.
10) ஆழ்துளைக் கிணறுகளுக்கு மாற்றாக அதிக ஆழமற்ற கிணறுகளைப் பயன்படுத்த அரசு அறிவுறுத்தவேண்டும்.

11) தென் சென்னை புறநகர்ப் பகுதிகளிலுள்ள ஏரிகளுக்கு இடையே உள்ள இணைப்புகளைப் புதுப்பிக்க வேண்டும்.
இந்த 11 பரிந்துரைகளைக் கடந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற பொறியியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் கே.பி. சுப்ரமணியன் சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.
"சென்னையை அருகே உள்ள மாவட்டங்களில் முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும். உட்கட்டமைப்பை அதிகப்படுத்த வேண்டும். அங்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதன் மூலம் மக்கள் சென்னையில் ஏற்படும் அதிகப்படியான குடியேற்றத்தைத் தடுக்கலாம்.

உதாரணமாகக் கடலூரிலிருந்து ஒருவர் சென்னைக்கு 2 மணிநேரத்தில் வந்துவிட முடியும் என்றால், அவர் ஏன் இங்கேயே குடியிருக்கப் போகிறார்?" என்கிறார். .
அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண் மை மையத்தின் சிறப்புப் பேராசிரியரான ராமச்சந்திரனும் இந்த இடமாற்ற திட்டத்தை ஆதரிக்கிறார்.
மேலும் அவர் பருவநிலை மாற்றத்தால் வங்காள விரிகுடா சூனியமாக மாறி வருகிறது. 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு சூறாவளி கிழக்கு கடற்கரை முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது.

தென்தமிழகத்தைப் போல் வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் 96 செ.மீ மழை பெய்தால் நம் நிலை என்ன ஆகும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆகவே இப்பகுதிகளிலிருந்து மக்களை இடமாற்றம் செய்வது பற்றிப் பரிசீலிப்பது அவசியம்" என்கிறார்












Click it and Unblock the Notifications