கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள்.. புது ரேசன் கார்டுகள் எப்போது.. அமைச்சர் சக்கரபாணி அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் வரும் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். புதிய குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொங்கலுக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஆதார் காட்டுடன் ரேசன் கடைகள் இணைக்கப்பட்ட பின்னர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 100 சதவீதம் கண் கருவிழி பதிவு மூலமாக ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சில பல சிக்கல் ஏற்பட்டு வரும் காரணத்தால், மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கருவிழி பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் ரேஷன் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த பொது விநியோகம் கணினி மயமாக்கப்பட்ட பிறகு, முன்பிருந்த பேப்பர் குடும்ப அட்டைகள் மாற்றப்பட்டு அனைவருக்கும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து, நியாய விலைக்கடைகளில் விற்பனை முனைய இயந்திரத்தின் உதவியோடு முதற்கட்ட நடவடிக்கையாக பயோமெட்ரிக் முறை அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்பட்டது
இந்த பயோமெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் அனைத்தும் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை பதிவு செய்த பிறகு தான் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோகம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இதன் மூலமாக ரேஷன் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு சென்று சேருவது உறுதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இந்த முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகை பதிவு செய்ய முடிவதில்லை. அதனால் ரேஷன் பொருட்களை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதுடன் தேவையற்ற சிக்கல் உருவாகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு வர முடியாததால், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பல நாட்களாக விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சிக்கல் ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இதைப் பலமுறை சரி செய்தும் இந்தக் பிரச்சனை தீரவில்லை. எனவே, விரல் ரேகை மின்னணு பதிவேட்டிற்கு பதிலாக கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்களைப் பெறும் முறை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு திருவல்லிக்கேணி ரேஷன் கடைகளில் முதல் முறையாக கருவிழி அடையாள முறை மூலம் பொருட்கள் விநியோகம் தொடங்கப்பட்டது. ஸ்மார்ட் குடும்ப அட்டையுடன் ஆதார் இணைப்பு இருப்பதால் தனியாக கண் கருவிழி பதிவு புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்துக்குள் 30 சதவிகித ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும். 9 மாதங்களுக்குள் திட்டத்தை அனைத்து ரேசன் கடைகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது. புதிய குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொங்கலுக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது பொது விநியோக கடைகளில் பயோமெட்ரிக் முறை அவ்வப்போது செயல் இழப்பதால் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அனைத்து ரேசன் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications