செந்தில் பாலாஜிக்கு போலி அறுவை சிகிச்சையா? எப்படி சொல்லலாம்? அமலாக்க துறையை ஒரு பிடி பிடித்த இளங்கோ!
சென்னை: செந்தில் பாலாஜியை முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அமலாக்கத்துறையே, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை போலியானது என எப்படி கூற முடியும் என ஐகோர்ட்டில் காட்டமாக கேள்வி எழுப்பினார் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

அமலாக்கத்துறை vs செந்தில் பாலாஜி மனைவி: இதற்கிடையே, தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என முறையிட்டது. அதற்கு எதிராக செந்தில் பாலாஜி மனைவி தரப்பு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி, அப்பாஸ், சஞ்சய் தத், நக்கீரன் கோபால், சமூக ஆர்வலர் நவ்லகா ஆகியோரது வழக்கில் உயர் நீதிமன்றம் மற்றும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டார்.
நீதிமன்ற காவலுக்கு அனுப்பியதே தவறு: செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டவிரோதம் உள்ளது. சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு இருப்பதால் ஆட்கொணர்வு வழக்கு தொடரலாம். கைதுக்கான காரணங்களை தெரிவிக்காமல் யாரையும் கைது செய்யக்கூடாது என்பதற்காகவே அரசியல் சாசன சட்டத்தின் 15ஏ பிரிவை அம்பேத்கர் சேர்ந்திருக்கிறார். செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணத்தை தெரிவித்திருக்க வேண்டும் எது அடிப்படை உரிமை. செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியதே தவறு என வாதிட்டார்.
உள்நோக்கம்?: மேலும், 2014-2015 காலகட்டத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு இப்போது செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்ததால் பழிவாங்கப்படுகிறார். திமுக அரசின் அமைச்சரான பிறகே செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021ல் வழக்குப் பதிவு செய்தது, செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கையில் உள்நோக்கம் உள்ளது என்றும் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
அதற்கு அமலாக்கத்துறை தரப்பு, செந்தில் பாலாஜி மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆட்கொணர்வு மனுவுக்கு மீறிய வாதங்களை முன்வைக்க முடியாது. வழக்கை ரத்து செய்யக்கோரும் மனு மீது வேண்டுமானால் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என வாதம் வைத்தது.
அறுவை சிகிச்சை போலி?: செந்தில் பாலாஜியை முதலில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றது அமலாக்கத்துறை தான். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை போலியானது என அமலாக்கத்துறை எப்படி கூற முடியும்? அறுவை சிகிச்சைக்குப் பின் செந்தில் பாலாஜியை விசாரிப்பது முறையல்ல என்ற முடிவுக்கு அமலாக்கத்துறை வந்திருப்பதற்கு நன்றி என்றார்.
செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட சிகிச்சையே கேள்வியாக உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டது. மேலும் விசாரணையை தாமதப்படுத்தவே இதுபோன்று செய்கின்றனர் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்நிலையில் தான் அறுவை சிகிச்சை போலி என அமலாக்கத்துறை எப்படி சொல்லலாம் என என்.ஆர்.இளங்கோ கேள்வி எழுப்பியுள்ளார்.
டைம் கேட்ட ED: மேலும், செந்தில்பாலாஜியை கைது செய்த போது சட்டவிதிகளை பின்பற்றவில்லை. இயந்திரத்தனமாக நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டுள்ளதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர அதிகாரமில்லை. சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலத்துடன் சேர்க்க கூடாது என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என என்.ஆர்.இளங்கோ வாதங்களை அடுக்கினார்.
செந்தில்பாலாஜி தரப்பில் தனது வாதத்தை வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நிறைவு செய்ததும், அமலாக்கத்துறை தரப்பில் பதில் வாதங்களை வைக்க அவகாசம் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணை வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என வழக்கை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications