கரூர் to மாமல்லபுரம்: விஜய்யை சந்திக்க புறப்பட்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும், நெரிசலில் காயமடைந்தவர்களையும் தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்தச் சந்திப்பு ந்டக்கிறது. கரூரில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தவெகவினர் ஏற்பாடு செய்த பேருந்துகளில் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சுமார் 110 பேர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் விஜய் வீடியோ வெளியிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, சில நாட்கள் கழித்து, பாதிக்கப்பட்டோரிடம் வீடியோ கால் வாயிலாக பேசிய விஜய், நேரில் வருவதாக அவர்களிடம் கூறியிருந்தார்.

கரூரில் உள்ள மண்டபத்தில், பாதிக்கப்பட்டோரை வரவழைத்து அவர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டார். இதற்காக, கரூரில் மண்டபங்கள் பார்க்கப்பட்டது. ஆனால், விஜய்யின் சந்திப்புக்கு கரூரில் மண்டபங்கள் கிடைக்க சிக்கல் நீடித்ததால், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக, பாதிக்கப்பட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தவெக நிர்வாகிகள் பேசியுள்ளனர். முதலில் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு அவர்களை அழைத்து வந்து சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் 41 பேரின் குடும்பத்தினரை சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளார்.
மாமல்லபுரம் தனியார் விடுதியில் சந்திப்பு நிகழ்ச்சி நாளை காலை நடைபெறுகிறது. இதற்காக, 41 பேரின் குடும்பத்தினரையும் மாவட்ட நிர்வாகிகள் மாமல்லபுரத்துக்கு அழைத்து வருகின்றனர். இதற்கான செலவுகள் அனைத்தையும் தவெக ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்களை தங்க வைப்பதற்காக, அந்த ஹோட்டலில் 50-க்கும் மேற்பட்ட அறைகளும் முன்வதிவு செய்யப்பட்டுள்ளன.
உயிரிழந்த 41 பேரில் 31 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 10 பேர் திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கண்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த தவெக நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இவர்களை சென்னைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தவெக சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்களோடு நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் விஜய்யை சந்திக்க உள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிவித்தபடி ரூ.20 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், காயம் அடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரண உதவி இதுவரை வழங்கப்படவில்லை. மாமல்லபுரத்தில் நாளை காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை விஜய் நேரடியாக வழங்குகிறார்.
பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் தவெக ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று காலை முதலே தவெக நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களை அழைத்து கரூர் வெண்ணைமலையில் உள்ள ஒரு அரங்கில் தங்க வைத்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு உணவு வழங்கிய பின், அங்கிருந்து 2 பஸ்களில் சென்னைக்கு அழைத்துச் செல்கின்றனர். இன்று இரவுக்குள் அனைவரும் சென்னை வருகை தர உள்ளனர். நாளை காலை அவர்கள் விஜய்யை சந்திக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications