சஞ்சு சாம்சன் இருந்திருந்தால்.. தேர்வு செய்யப்படாதது ஏன்? இஷான், சூர்யகுமாரை வெளுக்கும் ரசிகர்கள்!
சஞ்சு சாம்சன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னை: கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளில், குறைந்தபட்ச வாய்ப்புகள் கூட சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்படவில்லை என்று பிசிசிஐ நிர்வாகத்தை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் 234 பந்துகளில் மீதம் வைத்து இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தியுள்ளது.
முன்னதாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி ஒருமுறை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதேபோல் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.

சொதப்பும் சூர்யகுமார் யாதவ்
இந்தப் போட்டிகளில் எல்லாம் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாததால் இந்திய அணி தோல்வியடைந்தது. ஆனால் இன்றையப் போட்டியில் பேட்ஸ்மேன்களின் தவறால் இந்தியaணி தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் ஆட்டமிழந்ததை போல் மீண்டும் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறிய சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக விமர்சகர்கள் சொல்லி வருகின்றனர்.

இஷான் கிஷன் அணியில் ஏன்?
ஒருநாள் கிரிக்கெட்டில் 20 போட்டிகளுக்கு மேல் விளையாடியும் 25 மட்டுமே சராசரியாக வைத்துள்ள சூர்யகுமார் யாதவிற்கு எதற்காக தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்று கேள்விகள் எழுந்துள்ளன. அதேபோல் தொடக்க வீரரான இஷான் கிஷனுக்கும் ஏன் தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. வங்கதேச அணிக்கு எதிராக 200 ரன்களை விளாசியதற்கு முன்பாகவும் சரி, பின்பாகவும் சரி இஷான் கிஷனின் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை.

சஞ்சு சாம்சன் சராசரி
ஆனால் இஷான் கிஷன் டி20, ஒருநாள் மட்டுமல்லாமல் டெஸ்ட் அணியிலும் தேர்வு செய்யப்படுகிறார். மாறாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஃபார்மில் இருந்தும், 60க்கு மேல் சராசரி வைத்தும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக வெளியேறியும் அவருக்கு மாற்று வீரராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

வாய்ப்புகளில் பாரபட்சம்
இத்தனைக்கும் மிடில் ஆர்டர் வீரராக சஞ்சு சாம்சன் பல்வேறு தருணங்களில் இந்திய அணியை காப்பாற்றி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சஞ்சு சாம்சன் கடைசியாக விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளில் 5 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளில் பாதி அளவிற்கு கூட சஞ்சு சாம்சனுக்கு பிசிசிஐ நிர்வாகம் வாய்ப்பு வழங்கவில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications