தாம்பரத்தில் "படுத்த" பிள்ளையார்.. சென்னை சிட்லபாக்கத்தில் சாய்ந்த விநாயகர்.. ஈர்த்த சிலை.. சூப்பர்
சென்னை: தாம்பரத்தில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இங்கு நடைபெறும் விநாயகர் சிலை கண்காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. யாரிந்த சீனிவாசன்?
சென்னை குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கட்டிட கலை நிபுணர் ஆவார்.. தீவிர விநாயகர் பக்தரான சீனிவாசன், தாம்பரம் பகுதியில் கடந்த 17 வருடங்களாகவே ஆயிரக்கணக்கான விநாயகர் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார். கடந்த ஆண்டுகூட இவர் நடத்தியிருந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் காண்போரை கவர்ந்திருந்தது.

கண்காட்சி: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், காந்தி தெரு, ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் விநாயகர் சிலை கண்காட்சியையே இவர் கடந்த வருடம் நடத்தியிருந்தார். அதாவது, காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் பொதுமக்கள் கண்காட்சியை பார்க்க இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த கண்காட்சியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் விநாயகர் சிலைகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. முக்கியமாக, இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த 'சந்திரயான் பிள்ளையார்' பொதுமக்களிடயே வரவேற்பை பெற்றிருந்தது..
விநாயகர் சிலை: அதேபோல, மேலும், 7 அடி உயரத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்திவரதர் விநாயகர் சிலை, ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர், படகு ஓட்டும் விநாயகர், செஸ், கிரிக்கெட், கேரம் விளையாடும் விநாயகர் சிலைகள், சந்தனத்தில் செய்யப்பட்ட திண்டு விநாயகர், கண்ணாடி மாளிகையில் விநாயகர், சயன திருக்கோலத்தில் அமைந்துள்ள விநாயகர் உள்பட 20 ஆயிரம் விநாயகர் சிலைகள், விநாயகரின் அபூர்வ சிலைகளை கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்து போனார்கள்.
அந்தவகையில், இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு18ம் ஆண்டு விநாயகர் கண்காட்சி நடந்து வருகிறது. தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம், காந்தி தெரு, ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 21 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் இந்த கண்காட்சி ஆரம்பமாகியிருக்கிறது.
இன்று முதல் ஆரம்பம்: இன்று 7ம்தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ள நிலையில், ஏகப்பட்ட விநாயகர் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
குறிப்பாக சிப்பிக்குள் முத்து போல பிள்ளையார், முத்துலிருந்து பிறந்து வருவது போல சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, இருளிலும் மின்னும் ரேடியம் பிள்ளையார், திண்ணையில் படுத்து ஓய்வெடுக்கும் பிள்ளையார், சங்கு பிள்ளையார் என பல்வேறு பிள்ளையார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. அரை இன்ச்சில் இருந்து 8 அடி உயரம் வரையிலான பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்த சிலைகள் சேகரிக்கப்பட்டிருக்கிறதாம்.
தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஐம்பொன், இரும்பு, கண்ணாடியால் இந்த சிலைகள் செய்யப்பட்டிருக்கின்றன. காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் பொதுமக்கள் இந்த கண்காட்சியை இலவசமாக காணலாம்.
கண்ணாடி சொர்க்கம்: சந்திராயன் பிள்ளையார், ஏழரை அடி உயரத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்திவரதர் விநாயகர் சிலை, கண்ணாடி மாளிகையில் சொர்க்கத்தில் இருப்பது போன்ற சொர்க்க வாசல் விநாயகர், ஸ்கூட்டர், சைக்கிள், கார், ரயில் ஓட்டும் விநாயகர், இசைக் கலைஞர்களாக பல்வேறு வாத்தியங்களை இசையமைக்கும் விநாயகர், விநாயகரின் சயன திருக்கோலத்தில் பல்வேறு வடிவங்களில் சிலைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கண்காட்சியை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து அமைச்சர் சொல்லும்போது, "கடந்த 18 வருடங்களாக, இவர்கள் சொந்த ஏற்பாட்டில் அவர்களது திருமண மண்டபத்தில் தொடர்ந்து விநாயகர் கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். நானும் 3 ஆண்டுகளுக்கு மேல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன்.
திருவுருவ சிலைகள்: அரை அடியிலிருந்து 8 வரை பல்வேறு கோணங்களில் விநாயகரின் திருவுருவ சிலைகள் பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.
21,000 விநாயகர்களை பாதுகாப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.. இதுக்காக 2 மாதங்களாக தொடர்ந்து உழைத்து மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.. அவரை நான் மனதார வாழ்த்துகிறேன். இப்படியே தொடர்ந்து கண்காட்சியை எப்போதும் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications