பரபரப்பு! பாலியல் தொந்தரவு வழக்கில் புகார் கொடுத்த.. பெண் ஐபிஎஸ் அதிகாரி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், புகார் கொடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி இன்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சி அளித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் மாவட்ட எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தமிழகக் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த அதிகாரி, அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி அப்போது தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்திருந்தார்

புகார் அளிக்கச் சென்ற அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை வழிமறித்த செங்கல்பட்டு எஸ்.பி., புகார் அளித்தால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும் என்று மிரட்டும் வகையில் பேசியதாகவும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி. என இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் செங்கல்பட்டு டிஎஸ்பி மற்றும் புகார் அளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆகியோர் ஆஜராகி நேரில் சாட்சியங்கள் அளிக்க வேண்டுமென விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டிருந்தார்
அதன்படி இன்று முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி இருவரும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் ஆஜரானார்கள். அதேபோல புகார்தாரரான பெண் ஐபிஎஸ் அதிகாரியும் தனது தரப்பு சாட்சியை அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.












Click it and Unblock the Notifications