சென்னை மக்களே.. அலர்ட்! காய்ச்சல், சளி வேகமா பரவுது.. மருத்துவர்கள் சொல்லும் அறிவுரை!
சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் சமீபகாலமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் இரவில் கனமழை பகலில் வெயில் என தட்ப வெப்பநிலை மாறி நிலவியது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உடல் சோர்வு, மாலைநேர குளிர், வறட்டு இருமல், சளியுடன் காய்ச்சல் பரவி வருகிறது. மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் இந்தக் காய்ச்சல் எளிதில் குணமாவதில்லை. சிலருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் உடல் வலி, தொண்டை வலி பாதிப்பு தொடர்வதால், மர்ம காய்ச்சல் பரவுகிறதோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் மட்டும் தினமும் பல்வேறு வகை காய்ச்சலால், 1000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு, டைபாய்டு, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகளாக இருக்கலாம், எனவே கவனமாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெப்பநிலை மாற்றத்தால் சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது, 70 சதவீதத்துக்கு மேல், இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு தான் உள்ளது. அதேநேரம், டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை விட்டு விட்டுப் பெய்வதால், நன்னீரில் வளரக்கூடிய, ஏடிஸ் கொசுக்கள் அதிகளவில் இனப்பெருக்கமாக வாய்ப்பு அதிகம். அதனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும், இதன் காரணமாக உயிரிழப்பும் அதிகரிக்கக் கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
திறந்தவெளி இடங்கள், வீடுகளின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் துாய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முககவசம் அணிதல் போன்றவைகளின் வாயிலாக பாதிப்புகளை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications