சென்னை மெட்ரோ ரயிலில் பார்த்தால்.. ஆஹா அமைச்சர் பிடிஆர்! வியந்த மக்கள்.. ஹேப்பி உரையாடல்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 5வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இதில் பங்கேற்பதற்காக வெளியூரிலிருந்து சென்னை திரும்பிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மெட்ரோ ரயிலில் பயணித்து சட்டமன்றத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார். இந்த பயணத்தில் தன்னுடன் இருந்த சக பயணிகளிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்துள்ளார்.
நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடக்கம் முதல் அவை பரபரப்பாக செயல்பட்டு வந்த நிலையில், இன்றுடன் கூட்டத்தொடர் முடிவடைகிறது. இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.
இதனையடுத்து முன்வடிவம் பெற்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல பல புதிய அறிவிப்புகளும் வெளியாகியிருந்தன. குறிப்பாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மாநில அரசின் கடன் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

மெட்ரோவில் அமைச்சர்
இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை சென்னை வந்திருந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் சட்டசபைக்கு உரிய நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக காரில் பயணிக்காமல் மெட்ரோவில் பயணம் மேற்கொண்டார். விமான நிலையம் தொடங்கி ஓமந்துரார் தோட்டம் வரை மெட்ரோவில் பயணித்த அவர், சக பயணிகளிடம் கலந்துரையாடி குறைகளையும் கேட்டறிந்தார். இதனையடுத்து ஓமந்துரார் அரசினர் தோட்டத்திலிருந்து காரில் சட்டசபைக்கு வந்து சேர்ந்தார்.

மசோதா
வந்த வேகத்தில் சட்டமன்றத்தில் 'தமிழ்நாடு அரசுப்பணியாளர் சட்டத்தில்' திருத்தம் மேற்கொள்ளப்பட்ட மசோதாவை முன்மொழிந்தார். இந்த திருத்தம், தமிழில் போதிய அளவு கல்வி புலமை இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்று பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் வலியுறுத்துகிறது. அப்படி தேர்ச்சி பெறாதவர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசு பணிகள் 100 சதவிகிதம் தமிழர்களுக்கே என்கிற சூழல் உருவாகும் என்று திமுகவினர் கூறகின்றனர்.

நேரம் நீட்டிப்பு
முன்னதாக அமைச்சர் பிடிஆர் பயணித்த மெட்ரோ ரயில் சேவை பொங்கல் பண்டிகையையொட்டி நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, பொங்கல் பண்டிகைக்கு அனைவரும் சொந்த ஊர் செல்வதற்காக ரயில் முனையம் மற்றும் பேருந்து முனையங்களுக்கு செல்வதற்காக மெட்ரோ ரயிலை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். எனவே அவர்களின் வசதிகளுக்கு ஏற்ப இன்றும் மற்றும் நாளை(ஜன.13,14) மெட்ரோ ரயில்கள் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே மாலை 5-8 வரை இவ்வாறு இயக்கப்படும்.

மூன்று நாட்கள்
ஆனால் மேற்குறிப்பிட்ட இரண்டு நாட்களில் மட்டும் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இவ்வாறு ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மட்டுமல்லாது, அனைத்து மெட்ரோ ரயில் முனையங்களிலிருந்து செல்லும் கடைசி ரயில் 10 மணிக்கு இயக்கப்படும். ஆனால் இந்த இரண்டு நாட்களில் இது 12 மணிக்கு இயக்கப்படும். இது தவிர வரும் 18ம் தேதி அனைத்து ரயில் முனையங்களிலிருந்து புறப்படும் ரயில்கள் காலை 5 மணிக்கு பதிலாக 4 மணி முதலே இயங்க தொடங்கிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications