சென்னை மாநகர அரசு பஸ்சில் கண்டக்டரை கீழே தள்ளி கொன்ற பயணி.. 3 பிரிவுகளில் வழக்கு.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை மாநகர அரசு பஸ்சில் நேற்று ஏற்பட்ட திடீர் தகராறில் கண்டக்டர் ஜெகன் குமாரை ஓடும் பஸ்சில் இருந்து பயணி கோவிந்தன் கீழே தள்ளினார். இதில் ஜெகன்மூர்த்தி கீழே விழுந்து பலியானார். இதையடுத்து சென்னை மாநகர பஸ்கள் இயங்காமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட நிலையில் பயணி கோவிந்தன் மீது கொலை உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, என்ன நடந்தது? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் மாநகர அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் தேவையை பொறுத்து பல்வேறு வழித்தடங்களில் இந்த அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன. அவ்வப்போது பஸ்களில் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இடையே பிரச்சனை, வாக்குவாதம் என்பது ஏற்படும்.

இதுதொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி பரவுவதை நாம் பார்த்திருப்போம். இந்நிலையில் தான் நேற்று சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அதாவது ஓடும் பஸ்சில் இருந்து பயணி கீழே தள்ளியதில் சென்னை மாநகர அரசு பஸ் கண்டக்டர் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதாவது சென்னை எம்கேபி நகர் - கோயம்பேடு வழித்தடத்தில் இயங்கும் மாநகர அரசு பஸ்சில் ஜெகன் குமார் (வயது 52) என்பவர் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இந்த பஸ் நேற்று இரவு 7.30 மணியளவில் முல்லை நகர் பஸ் டெர்மினஸில் இருந்து 30 பயணிகளுடன் புறப்பட்டது. அமைந்தகரை அண்ணா நகர் ஆர்ச் அருகே வேலூர் மாவட்டம் மாதனூரை சேர்ந்த கோவிந்தன் (53) என்பவரும் பஸ்சில் ஏறினார்.
அப்போது ஜெகன் குமார் என்பவர் பயணி கோவிந்தனிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் இருவருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கைக்கலப்பு உருவாகி உள்ளது. அப்போது ஓடும் பேருந்தில் இருந்து கண்டக்டர் ஜெகன் குமார் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பயணி கோவிந்தன் கீழே தள்ளி தான் கண்டக்டர் ஜெகன் குமார் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அமைந்தகரையில் சென்னை மாநகர பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பயணி கோவிந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் டிரைவர், கண்டக்டர்கள் கூறினர். இதையடுத்து உடனடியாக கோவிந்தன் கைது செய்யப்பட்டார். கண்டக்டர் ஜெகன் குமாருடன் ஏற்பட்ட மோதலில் அவரும் காயமடைந்திருந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் கைதான பயணி கோவிந்தன் மீது அமைந்தகரை போலீசார் கொலை, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியைரை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கண்டக்டர் ஜெகன் குமார் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர்.
சென்னை சைதாப்பேட்டை லிட்டில் மவுண்ட் பகுதியில் தங்கி பணி செய்து வந்தார். தற்போது ஜெகன்குமார் இறந்தது பற்றி நாகர்கோவிலில் உள்ள அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் கிளம்பி சென்னை வரும் நிலையில் இன்று காலையில் ஜெகன் குமார் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications