சென்னையில் திடீரென கட்டிடத்தில் மளமளவென பற்றிய தீ.. பதறிய மக்கள்.. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!
சென்னை : சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏசியில் பற்றிய தீ மளமளவென பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள உள்ள பிரெசிடென்சி கிளப் எனும் விடுதியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. பிரெசிடென்சி கிளப்பில் இன்று காலை 10.30 மணி அளவில் மேலாளர் வழக்கம் போல் பணிக்கு வந்து தன்னுடைய அறையில் உள்ள ஏசியை ஆன் செய்துவிட்டு கீழே சென்றுள்ளார்.

இதையடுத்து, அந்த அறையில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக ஏசியில் பற்றிய தீ அறை முழுவதும் பரவியது. சில நிமிடங்களில் தீ கொளுந்துவிட்டு மளமளவென பிடித்து அறை முழுவதும் எரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் அரை மணி நேரம் போராடி பரவிய நெருப்பை கட்டுப்படுத்தினர். தற்போது தீ அணைக்கப்பட்டுள்ள நிலையில், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக எழும்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மின்கசிவால் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. முன்னதாக நேற்று அதே எழும்பூரில் அமைந்து சிபிசிஐடி அலுவலக கட்டிடத்தின் மொட்டை மாடியில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று மதியம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலக கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. புகையைத் தொடர்ந்து திடீரென கட்டிடம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.
மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த ஏசி கம்ப்ரஸர்களில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், எழும்பூர் பகுதியிலேயே இன்றும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அப்பகுதியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications