சென்னையில் பங்களா வீட்டில் பற்றி எரிந்த தீ.. உயிரோடு கருகிய வயதான தம்பதி.. வளசரவாக்கத்தில் சோகம்
சென்னை: சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியில் பங்களா வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீ அணைப்பு படையினர் 30 க்கும் மேற்பட்டோர் வந்து தீயை அணைக்க போராடினர். இதில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார். அந்த வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதி நடராஜன் மற்றும் அவரது மனைவி தங்கம் உயிரிழந்தனர்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் சவுத்ரி நகர் 4வது பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் வசித்து வந்தவர் ஸ்ரீராம். இவர் மனைவி மற்றும் மகன்கள் மற்றும் தாய் தந்தையுடன் வசித்து வந்தார். இன்று காலையில் வேலை விஷயமாக ஸ்ரீராமும், அவரது மனைவியும் வெளியில் சென்றனர். வீட்டில் ஸ்ரீராமின் மகன் சஹன் மற்றும் அவரது தந்தை நடராஜன், தாய் தங்கம் ஆகியோர் இருந்துள்ளனர்.

திடீரென பற்றி எரிந்த தீ
இந்த நிலையில் மதியம் 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகை வெளியில் வரவே மற்றவர்களுக்கு தெரிந்துள்ளது. இதனையடுத்து வீட்டில் இருந்து அவர்கள் 3 பேரும் வெளியேறுவதற்குள் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இவர்களுடன் வீட்டு பணிப்பெண் ஒருவரும் சிக்கிக்கொண்டார். இதனால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் 3 வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயற்சித்தனர். விசாரணையில் வீட்டில் 4 பேர் சிக்கியிருந்தது தெரியவந்தது. இதற்கிடையே ஸ்ரீராமின் மகன் சஹன் வீட்டின் ஜன்னல் வழியாக குதித்து தப்பினார். இதேபோல் வீட்டு பணிப்பெண்ணும் ஜன்னல் வழியாக கீழே குதித்தார். இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
பூஜை அறையில் இருந்து வந்த தீ
வீட்டில் இருந்து முதியவர்களான நடராஜன் மற்றும் தங்கம் ஆகிய இருவர் மட்டும் வெளியேற முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தனர். ஒன்றரை மணி நேரமாக போராடியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்த நிலையில், வயதான தம்பதி பிணமாக மீட்கப்பட்டனர். தற்போது வளசரவாக்கத்தில் மழை பெய்து வருவதால், தீயை அணைக்கும் பணி கொஞ்சம் சுலபமாகியுள்ளது. எனினும் தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் வீட்டின் பூஜை அறையில் இருந்து தான் தீ விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வயதான தம்பதி இருவரும் உடல் கருகி பலியான சம்பவம் வளசரவாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications