“பாசிச பாஜக ஆட்சி ஒழிக”.. ஏர்போர்டில் கடுப்பான தமிழிசை! தூத்துக்குடி சோபியா நினைவிருக்கா? FLASHBACK
திரும்பினால் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி. தூங்கும் முன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி என்று சுறுசுறுப்பாக இயங்கினார் தமிழிசை.
சென்னை: மதுரை விமான நிலையத்தில் அதிமுக இடைக்கால எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு நபர் கண்டன முழக்கம் எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசையை பார்த்து பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று ஒரு பெண் முழக்கமிட்டது நினைவிருக்கிறதா? அன்று என்ன நடந்தது என்று கடந்த காலத்துக்கு சென்று பார்ப்போம்.
தற்போது தெலுங்கா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் அரசு பதவிகளை அலங்கரித்து வரும் தமிழிசை சவுந்திரராஜன், தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்து பம்பரமாக சுழன்று தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்க போராடிக் கொண்டு இருந்த காலம் அது.
காலை சென்னை விமான நிலையத்தில் பேட்டி. மதியம் மதுரை விமான நிலையத்தில் பேட்டி. மாலை கோவை விமான நிலையத்தில் பேட்டி. திரும்பினால் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி. தூங்கும் முன் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி என்று சுறுசுறுப்பாக இயங்கினார் தமிழிசை.

தூத்துக்குடி விமான நிலையம்
இப்படிதான் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒருநாள் அவர் வழக்கம்போல் தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றுள்ளார். அப்போது அதே விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற பட்டதாரி பெண் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று விமானத்தில் இறங்கும்போது முழக்கம் இட்டார். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக, மத்திய அரசையும் அவர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

சோபியா கைது
இதை கேட்ட தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் சோபியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் அளித்த புகாரின் பேரில் சோபியாவை போலீசார் கைது செய்ததுடன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களும் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சோபியா மனுத்தாக்கல்
கனடாவில் உள்ள மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி சோபியா, சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி விமானத்தில் பயணித்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது. அப்போது அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சோபியா மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

தமிழிசை மிரட்டினார்
"ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி பலர் உயிரிழந்த சம்பவம் சம்பவம் வேதனை அளித்தது. எனவே, விமானத்தில் இருந்து இறங்கும்போது மத்திய அரசை விமர்சித்தேன். அப்போது தமிழிசை சவுந்தரராஜன், விமான நிலையத்தில் என்னை மிரட்டும் விதமாக என்னைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார்.

விசாரணைக்கு தடை
ஆனால் போலீஸார் என் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்து மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்" என்று கோரி இருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு சோபியா மீதான விசாரணைக்கு தடை விதித்தது. தமிழிசை ஆளுநராகிவிட்டதால் எதிர்மனுதாரராக விமான நிலைய இயக்குநர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

ரூ.2 லட்சம் இழப்பீடு
அதேபோல் மாணவி சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி, மாநில மனிய உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். விசாரணை என்ற பெயரில் தனது மகளை போலீசார் மதியம் முதல் இரவு வரை காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப்படுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகவும், அதற்காக சோபியாவுக்கு தமிழ்நாடு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications