மழை வெள்ள பாதிப்பு.. ஜனவரியில் அரையாண்டு தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்!
சென்னை: வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மற்ற இடங்களில் அரையாண்டு தேர்வுகள் வரும் 9 ஆம் தேதி முதல் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு வரும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதேபோல, டிசம்பர் 16 ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன.

இதற்கிடையே ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக இந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை வெள்ளம் காரணமாக பள்ளிகளில் தேர்வுகள் நடத்துவது சிக்கலாகி உள்ளது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி, தேர்வு தள்ளிவைக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த செய்முறை தேர்வுகள் மழை பாதிப்பு காரணமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஜனவரி மாதம் நடத்தப்படும். ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப்போது 9ஆம் தேதி நடைபெறுகின்ற அரையாண்டு தேர்வு தேதியில் மாற்றம் இல்லை. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், டிசம்பர் ஒன்பதாம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால், தொடர்ந்து நீர் தேங்கியிருந்தால் ஜனவரி மாதம் நடத்தப்படும்.
அதிக வெள்ள பாதிப்பு உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களிடம் ஆலோசித்து வருகிறோம். தலைமையாசிரியர் அலுவலகம், சான்றிதழ்கள் வைத்திருக்கும் அறைகள் தரை தளத்தில் இருந்தால் முதல் தளத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள், நோட்டுகள் விரைவில் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications