ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் வயதான தம்பதி கொலை.. அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த டிடிவி தினகரன்
சென்னை: திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்த தம்பதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொலைக் குற்றவாளிகளை கண்டறிவதில் அலட்சியமாக செயல்படும் தி.மு.க. அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்றும், காவல் துறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது என்றும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டலத்தில் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தோட்டத்து வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோரை கொலை செய்து, பணம், நகை போன்றவற்றை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் சமீபகாலமாக தொடர்ந்து அதிகளவில் நடைபெற்று வருகிறது. சில வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸாரே குழப்பமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சேலத்தில் தனியாக வசித்து வந்த கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (65). மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வித்யா (60) உடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இருவரையும் வெட்டி விட்டு தப்பியுள்ளனர்.
பலத்த காயமடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வித்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தனியாக வசிக்கும் வயதானவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொலைக் குற்றவாளிகளை கண்டறிவதில் அலட்சியமாக செயல்படும் தி.மு.க. அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்றும் காவல் துறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது என்றும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அண்மைக்காலமாகவே தனியாக வசித்து வரும் முதியவர்களை நோட்டமிட்டு கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத தி.மு.க. அரசால் தற்போது மேலும் ஒரு இரட்டைக் கொலை அரங்கேறியுள்ளது.
ஒவ்வொரு கொலைச் சம்பவத்தின் போதும் பல்வேறு தனிப்படைகளை அமைத்தும், தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் இதுவரை கொலைக் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறி வரும் காவல்துறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, சேலத்தில் வயதான தம்பதியினர் கொலை வழக்கை விரிவாக விசாரித்து கொலைக் குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை விதிப்பதோடு, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications