ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக!
சென்னை: திமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அக்கட்சியின் முக்கியப் புள்ளியும், தி.நகர் தொகுதி முன்னாள் சட்டசபை உறுப்பினருமான ஜெ.கருணாநிதி தற்பொழுது அதிகாரப்பூர்வமாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார்.

திமுகவில் கடந்த சில காலமாகவே புகைந்து கொண்டிருந்த உள்கட்சி அதிருப்தி தான் இந்த திடீர் கட்சி தாவலுக்கு முக்கியக் காரணம் என அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
கட்சி தாவலின் பின்னணி என்ன?
சென்னை திமுகவில் செல்வாக்குமிக்க வட்டாரச் செயலாளராக இருந்து, பின்னர் தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்தவர் ஜெ.கருணாநிதி. தொகுதி மக்களிடம் நெருக்கமானவராக இருந்தாலும், கடந்த சில மாதங்களாகவே திமுகவின் தலைமை மற்றும் மாவட்டத் தலைமை மீது அவர் கடுமையான அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதற்கு காரணம் கடந்த 2026 சட்டசபை தேர்தலில் கருணாநிதிக்கு திமுக தலைமை சீட் கொடுக்கவில்லை. அவருக்கு பதிலாக அவரது அண்ணன் மகனுக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த கருணாநிதி, தனது பகுதிச் செயலாளர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார்.
கட்சி பணிகளில் ஈடுபடாமல் இருந்த நிலையில் கருணாநிதியின் மகள் தவெகவில் இணைந்தார். அத்துடன் திநகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட புஸ்ஸி ஆனந்த்திற்கு பிரச்சாரமும் செய்திருந்தார். கருணாநிதியும் பிரச்சாரம் செய்கிறார் என தகவல்கள் கிடைத்த போது அவர் அதை மறுத்தார்.
இந்த நிலையில் இன்று அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள், மாஜி எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்துள்ளனர். அதில் திமுகவில் இருந்து விலகிய கருணாநிதி, தவெகவில் இணைந்தார்.
மகளின் 'சைலண்ட்' ஆபரேஷன்!
கருணாநிதியின் இந்தத் திடீர் முடிவுக்குப் பின்னால் அவரது மகள் தான் மாஸ்டர் பிரைனாகச் செயல்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் மகள் ஏற்கனவே தவெகவில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
குறிப்பாக, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களின் போது, உடனிருந்தவர் கருணாநிதியின் மகள் தான் எனக் கூறப்படுகிறது. தவெக தலைமையுடன் தமக்கு ஏற்பட்ட நெருக்கத்தைப் பயன்படுத்தி, தன் தந்தையையும் தவெக கோட்டைக்குள் கொண்டு வந்துள்ளார் மகள் என்கிறார்கள்.
அதிமுகவைத் தொடர்ந்து திமுகவிற்கும் செக்!
சமீப நாட்களாக திருச்சி வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் பலரைத் தனது பக்கம் இழுத்து வந்த தவெக, இப்போது ஆளும்கட்சியான திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-விற்கே வலைவீசிப் பிடித்துள்ளிருப்பது கோட்டை வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
அதிமுக கோட்டையைத் தொடர்ந்து, தற்போது திமுகவின் முக்கிய விக்கெட்டுகளையும் தவெக சாய்க்கத் தொடங்கியிருப்பது வரும் காலங்களில் தமிழக அரசியலில் இன்னும் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications