இவங்களே சொல்லிட்டாங்களா? பழிவாங்குதா மத்திய அரசு? தேர்தல் ஆணையத்திற்கு போன 'முன்னாள்கள்'.. என்னவாம்
சென்னை: தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் போக்கில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணைய முன்னாள் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையை கண்டு மௌனம் காக்க கூடாத என தேர்தல் ஆணையத்திற்கு அவர்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
அடுத்த வாரத்தில் லோக்சபா தேர்தல் தொடங்கும் நிலையில், நாடு முழுவதும் மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையின் நடவடிக்கை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவா, பிஆர்எஸ் தலைவர்களில் ஒருவரான கவிதா ஆகியோரின் கைது நடவடிக்கையும், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம், மஹுவா மொய்த்ராவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சிபிஐ ரெய்டும் இந்த விமர்சனங்களுக்கு முக்கிய காரணமாகும்.

இந்நிலையில், தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் போக்கில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணைய முன்னாள் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில்,
"லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த தருணத்தில், எதிர்க்கட்சியின் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது வேண்டுமென்றே நடந்ததை போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. அதே நேரம் வருமான வரித்துறை ஏன் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கின் பழைய விவரங்களை தோண்டி எடுக்க வேண்டும்?
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ராவுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ திடீர் ரெய்டு நடத்துவதும், அவருக்கு எதிராக நோட்டீஸ் கொடுப்பதும் தேர்தல் நேரத்தில் செய்ய வேண்டிய அவசியம் என்ன? கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படாமல் காலம் தாழ்த்துவதும், வழக்குகளைத் தேர்ந்தெடுத்து தொடர்வதில் உள்ள தேவையற்ற வைராக்கியம் ஆகியவை, மத்திய விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் மீதான கேள்வியை எழுப்பியுள்ளது.
இவற்றின் செயல்பாடுகள் நீதியை நடைமுறைப்படுத்துவதையும் கடந்து, உள்நோக்கம் கொண்டதாக இருப்பதாக எங்களுக்கு தெரிகிறது. தேர்தல் செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்க, எதிர்க்கட்சிகளுக்கு சுதந்திரமான செயல்பட்டை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் வெறுமென வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பதாக பொதுமக்களிடம் அதிருப்தி எழுந்திருக்கிறது" என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடிதத்தில், முன்னாள் வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன், முன்னாள் உயர் ஆணையர் சிவசங்கர் முகர்ஜி, பஞ்சாப் முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஜூலியோ ரிபெய்ரோ, முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் விஜய லதா ரெட்டி, முன்னாள் சுகாதாரச் செயலர் கே. சுஜாதா ராவ் என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் 87 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications