புதுசா வந்து சேர்ந்த... அண்ணாமலைக்குப் புதுப் பதவி.. தமிழக பாஜக அதிரடி!
சென்னை: தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் பதவி அண்மையில் அந்தக் கட்சியில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு பாஜகவில் கடந்த வாரம் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை சேர்ந்தார். இவர் கர்நாடகா மாநிலத்தின் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து தனது பணியை ராஜினாமா செய்தார். டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் அந்தக் கட்சியில் சேர்ந்து இருந்தார். இந்த நிலையில் இன்று அவருக்கு தமிழகத்தில் பாஜக துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு தெற்கு டிசிபியாக பணியாற்றி வந்த அண்ணாமலை கடந்த 2019ஆம் ஆண்டில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடனடியாக சேரவில்லை. கரூர் மற்றும் கோயம்புத்தூர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.
கடந்த மே மாதம் தனது ஃபேஸ்புக் பதிவில், தமிழ்நாடு அரசியலில் நுழைவதற்கு முடிவு செய்து இருக்கிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறேன். அரசியலில் சேருவதன் மூலம் சிஸ்டத்தில் மாற்றம் கொண்டு வரவிருக்கிறேன்'' என்று தெரிவித்து இருந்தார்.
இதற்குப் பின்னர் பல முறை பேசி இருந்த அண்ணாமலை, ''போலீஸ் அதிகாரியாக இருந்தபோது என்னால் சுதந்திரமாக கருத்துக் கூற முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜக குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது இருக்கிறது. நான் மனதளவில் தேசியவாதியாக இருக்கிறேன். நாட்டிலேயே பாஜகவில்தான் முகஸ்துதி இல்லாமல், ஒருசார்பு இல்லாமல் அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது'' என்று தெரிவித்து இருந்தார்.
இதுமட்டுமின்றி தனக்கு மிகவும் பிடித்த தலைவர் பிரதமர் மோடி என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாட்டின் பாஜக துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
