தூத்துக்குடி அதிமுக முக்கிய புள்ளி.. மாஜி அமைச்சர் மகன் கட்சியில் இருந்தே நீக்கம்! எடப்பாடி அதிரடி
சென்னை: தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பி.எஸ். ராஜா (தூத்துக்குடி தெற்கு பகுதிக் கழகச் செயலாளர் ) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் மகனான எஸ்.பி.எஸ். ராஜா நேற்று உறவினரிடம் பணம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கட்சியில் இருந்து நீக்கம்
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு. எஸ்.பி.எஸ். ராஜா, ( தூத்துக்குடி தெற்கு பகுதிக் கழகச் செயலாளர் ) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் மகனான எஸ்.பி.எஸ். ராஜா நேற்று உறவினரிடம் பணம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜா நீக்கத்திற்கான பின்னணி:
எஸ்பி சண்முகநாதனின் மகளும் ராஜாவின் சகோதரியுமான பொன்னரசி (வயது 38) சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், என் உடன் பிறந்த தம்பி ராஜா அதிமுக கவுன்சிலராக உள்ளார்.மாநகராட்சியில் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வரும் ராஜாவும், அவருடைய மனைவி அனுஷாவும் சேர்ந்து பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்தால் 16 % லாபத்தில் பங்கு தருவதாக என்னிடம் கூறினார்கள். எனது கணவருக்கு ஸ்ரீபெரும்புதூர், நந்தம்பாக்கம் பகுதியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அடமானமாக வைத்து வங்கி மூலம் எனது தம்பி ராஜா ரூ.11 கோடி கடன் பெற்றார். கடனாக பெற்ற இந்த பணத்தை தனது நிறுவனத்தில் ராஜா முதலீடாக வைத்துக்கொண்டார்.
40 ஏக்கர் நிலம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கல்குவாரி துவங்க இருப்பதாகவும் கூறியதால், என்னுடைய 300 சவரன் தங்க நகைகளை எனது தம்பிக்கு கொடுத்தேன். அந்த நகைகளை அடைமானம் வைத்து 40 ஏக்கர் நிலத்தை வாங்கிய ராஜா, அவருடைய பெயரில் பதிவு செய்து கொண்டார்.
மொத்தம் ரூ.17 கோடி அளவுக்கு எனது தம்பி என்னிடம் பணம் வாங்கி அவரது நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக கூறினார். என்னையும் அவரது நிறுவனங்களில் ஒரு பங்குத்தாரராக நியமித்திருந்த நிலையில், அந்த பங்குதாரர் பதவியை எனக்கு தெரியாமலேயே திடீரென நீக்கி விட்டார். அதற்கு பதில் தனது மனைவி அனுஷாவை பங்குதாரராக ராஜா சேர்த்துவிட்டார்.
அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி
அதே போல, அவரது நிறுவனங்களின் மொத்த இயக்குனராகவும் அனுஷாவை நியமித்து இருக்கிறார்கள் என்னிடம் ரூ.17 கோடி பணத்தை வாங்கி கொண்டு எனக்கு எந்தவித உரிமையோ, லாபத்தில் பங்கோ தரவில்லை. நான் முழுமையாக ஏமாற்றப்பட்டு விட்டேன். என் தம்பி ராஜா மீதும், அவருடைய மனைவி அனுஷா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் அளித்து இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ராஜாவை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், அவர் மலேசியா செல்வதற்காக சென்னை ஏர்போர்ட்டிற்கு நேற்று வந்தார். அப்போது தனிப்படை போலீசார் ரஜாவை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாகவே அதிமுகவில் இருந்தும் ராஜா நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவின் முக்கியமான பிரமுகராகவும் தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் தேர்தலில் வேட்பாளராகவும் நிறுத்தப்படலாம் என்று கட்சியினர் மத்தியில் பேசப்பட்டவருமான ராஜா, அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டு இருப்பது கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications