எழுதி வச்சுக்கங்க.. கட்சி உடையும்! இரட்டைஇலை முடங்கும்! ஆணழகன் போட்டியா நடக்குது? புகழேந்தி சுளீர்
சென்னை : அதிமுக சட்ட விதிகளின்படி பொதுச் செயலாளர் பதவி என்பதை இனிமேல் அதிமுகவில் கொண்டுவர முடியாது, அப்படியே கொண்டுவர எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்தாலும் நிச்சயம் அதிமுக செங்குத்தாக உடையும் எனவும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி அதிரடியாக கூறியுள்ளார்.
அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் திருப்பங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி உ பன்னீர்செல்வம் இடையேயான மோதலும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
ஜூலை 11ஆம் தேதி இந்த ஆண்டில் இரண்டாவது பொதுக் குழு கூட்டம் வானகரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் விவாதத்திற்கு 7 பொருண்மைகள் எடுத்துக் கொல்லப்படும் எனவும், அதில் ஒன்றாக பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவரும் விவாதம் இருக்கும் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுகவில் மோதல்
இந்த விவாதங்களின் படி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அதன் பின்னர் பொதுச் செயலாளரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்சி விதிகளின்படி அதற்கான தேர்தல் தேதியும் அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொது செயலாளர் வருவதற்கான முன்னேற்பாடுகளை அவரது தரப்பினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக சட்ட விதிகளின்படி இது செல்லாது எனவும் கூறப்படுகிறது.

பெங்களூரு புகழேந்தி
இந்நிலையில் இதுகுறித்து பேசி உள்ள அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் ஆன பெங்களூரு புகழேந்தி அதிமுகவை பொருத்தவரை பொது செயலாளர் பதவி என்பதை இனிமேல் கொண்டுவர முடியாது என உறுதிப்பட தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிலும் பிரத்தியேக பேட்டி அளித்த அவர்," அதிமுகவில் திருத்தப்பட்ட 20/பி, 43 சட்டவிதிகளின் படி ஏற்கனவே இருக்கும் விதிகளை திருத்த முடியாது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ரத்து செய்ய எந்த அதிகாரமும் கிடையாது. '

தீர்மானம் செல்லாது
தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளை மாற்ற அதிகாரம் இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது டிசம்பர் 1,2021ல் நிறைவேற்றப்பட்டது. இது தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பொதுக்குழுவை நிறைவேற்ற எந்த அதிகாரமும் கிடையாது. தன்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காக சர்க்கஸுக்கு பாஸ் கொடுப்பது போல் 3000 பேரை சேர்த்தாலும், 10 ஆயிரம் பேரை சேர்த்தாலும், ஒன்றும் பண்ண முடியாது. ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னதையே தற்போது வரை சொல்கிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி திட்டம்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு உறுப்பினர் கூட புதிதாக சேரவில்லையா. மேலும் ஏற்கனவே கட்சி வீதிகளை மீதியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீக்கிவிட நிலையில் எடப்பாடி சொல்வது காமெடியாக உள்ளது பொதுக்குழு கூடினாலும் அதிமுக விதிகளின்படி ஓ பன்னீர்செல்வத்தினை ஒன்றும் செய்ய முடியாது. பொதுக்குழுவில் கூட்டி எந்த தீர்மானங்களை நிறைவேற்றினாலும் அது செல்லாது காரணம் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றால் அது கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளரால்தான் முடியும்.

ஓ.பன்னீர்செல்வம்
முதலமைச்சர் பதவி, முதல்வர் வேட்பாளர்,, எதிர்க்கட்சித் தலைவர் பதவி என அனைத்தையும் கட்சி நலனுக்காக விட்டுக் கொடுத்த ஓ,பன்னீர்செல்வத்தினை நீக்க முயற்சித்தால் அதிமுக நிச்சயமாக செங்குத்தாக பிளவு படும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். இதனால் பாஜக உள்ளே வந்துவிடும். இதைத்தான் எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்க்கிறார் என்றால் அதை கண்டிப்பாக செய்யலாம் . ஆனால் உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை எடப்பாடி பழனிச்சாமியால் எதுவும் செய்ய முடியாது. குறிப்பாக எடப்பாடி உடன் சேர்ந்து இருக்கும் கேபி முனுசாமி, சிவிசண்முகம் உள்ளிட்டோரால் எடப்பாடி பழனிச்சாமி நிச்சயம் தோல்வியை சந்திப்பது உறுதி.

ஆணழகன் போட்டி
மேலும் ஜூலை 11ஆம் தேதி ஆணழகன் போட்டியா நடைபெற இருக்கிறது. அப்படி சொன்னால் கூட ஜெயக்குமார் சட்டையை கழற்றிவிட்டு நின்றுவிடுவார். எதற்கு தேவையில்லாமல் இந்த பொதுக்குழு ஆளுகட்சியாக இருந்தாலும் பொதுக்குழு கூட்டி சில முடிவுகளை எடுத்தால் அதன் மூலம் பலன் இருக்கும். ஆனால் தற்போது பதவி ஆசைக்காக ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது இது நிச்சயம் செல்லாது" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications