வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கு! சுத்தி வரும் ‘பெரிய’ பிரச்சினை! ஓவர் டென்ஷனில் ஓபிஎஸ்!
சென்னை: அரசியல்வாதிகள் படுகொலை, பாலியல் பலாத்காரம், கள்ளச்சாராய மரணங்கள், பட்டாசு ஆலையில் அடிக்கடி நிகழும் வெடி விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என பல அச்சுறுத்தல்களுக்கு இடையே, கேரளாவில் அமீபா தொற்றுநோய் பரவி வருவதும், கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பறவை காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பாதிப்பை தொடர்ந்து தற்போது கேரளாவை மற்றொரு நோய் ஆட்டுவித்து வருகிறது. மூளையை தின்னும் அமீபாவுக்கு இதுவரை மூன்று உயிர்கள் பலியாகி இருக்கும் நிலையில் கேரளாவில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

அரிதினும் அரிதான மூளையை தின்னும் அமீபாவால் கடந்த சில நாட்களில் கோழிக்கட்டை சேர்ந்த சிறுவன், கண்ணூரைச் சேர்ந்த தட்சிணா, மலப்புரத்தைச் சேர்ந்த ஃபட்டுவா ஆகியோர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்கள் அனைவருமே நீர் நிலைகளில் குளித்த பிறகு அவர்களுக்கு தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டதற்குப் பிறகு அவர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற மூளையைத் தின்னும் அமீபா பரவலை தடுக்க தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும்" உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் அமீபா தொற்றுநோய் பரவி வருவதும், கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," அரசியல்வாதிகள் படுகொலை, பாலியல் பலாத்காரம், கள்ளச்சாராய மரணங்கள், பட்டாசு ஆலையில் அடிக்கடி நிகழும் வெடி விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என பல அச்சுறுத்தல்களுக்கு இடையே, கேரளாவில் அமீபா தொற்றுநோய் பரவி வருவதும், கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் மூளையை தின்னும் அமீபா என்னும் தொற்றுநோய் காரணமாக நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் இந்த நோய் பாதிக்கப்பட்டால் 97 விழுக்காடு உயிரிழப்பு ஏற்படும் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
தலைவலி, காய்ச்சல், வாந்தி போன்றவை அமீபாவின் ஆரம்ப அறிகுறிகள் என்றும், பராமரிக்கப்படாத நீர்நிலைகள், ஏரி, ஆறு, நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீர் கோடைக் காலத்தில் நீண்ட நாட்கள் அதிக வெப்ப நிலையில் இருக்கும்போது, அதில் குளிப்பவர்களுக்கு அமீபா என்னும் உயிரி மூலம் தொற்று ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்தத் தொற்று நோய், சுகாதாரமற்ற நீர் நிலைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக உடலுக்குச் சென்று பாதிப்பினை ஏற்படுத்துவதால், தமிழ்நாட்டில் உள்ள நீச்சல் குளங்களை சுத்தம் செய்யவும், நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும்போது மூக்கு கிளிப் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தவும், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தீவிரக் கண்காணிப்பினை மேற்கொள்ளவும், இதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இதேபோன்று, அண்டை மாநிலமான கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை ஒட்டியுள்ள பெங்களூருவில் மட்டும் 2,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, டெங்குக் காய்ச்சல் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications