ஃபார்முலா 4 ரேஸ்.. பணியிலேயே பிரிந்த உயிர்! உதவி ஆணையர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி
சென்னை: சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயத்தையொட்டி, சென்னை அண்ணாசாலை மன்றோ சிலை அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காவல் உதவி ஆணையர் சிவக்குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் பந்தயத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வரிசையாக அணிவகுத்து நின்ற கார்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தன.

இந்நிலையில் சாலையோரங்களில் போட்டிகளை காண வந்த பார்வையாளர்கள் உற்சாகமாக கையசைத்து வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் இந்த பந்தயத்தால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் சென்னை பார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையாளர் சிவக்குமார் திடீரென நெஞ்சு வலியால் பலியானார். கார் பந்தத்துக்காக தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர் நெஞ்சு வலியால் மயக்கம் அடைந்ததாகவும், அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த காவல்துறை உதவி ஆணையரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆணையராக பணியாற்றிவந்த திரு.சிவகுமார் (வயது 53) இன்று (31.8.2024) பகல் சுமார் 12.45 மணியளவில் சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சைக்காக இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
காவல்துறை உதவி ஆணையர் திரு. சிவகுமார் அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு. சிவகுமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications